Sat. Apr 27th, 2024

மாணவர்களை தட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைவரதும் – வினோத்குமார் தெரிவிப்பு

போட்டிமிகு பரீட்சையில் உலகில் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு கீழா உள்ளவர்களை அனைவரும் தட்டிக் கொடுத்து முன்னேற்ற வேண்டியது அனைவரது தார்மீக பொறுப்பு என யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் செ.வினோத்குமார் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள தரம் 5 புலமைப் பரீட்சை பெறுபேறு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பெற்றோராகட்டும் மாணவராகட்டும் ஆசிரியராகட்டும் அனைவரும் அர்ப்பணிப்புடனே தத்தமது கடமைகளை செய்வார்கள். அப்படியான நிலையில் சிலர் வெற்றிபெறுவார்கள் சிலர் வெற்றிக்கு அண்மிப்பார்கள் சிலர் வெற்றிபெறத் தவறுவார்கள். அதற்காக அவர்கள் அவர்களுடைய இலக்கை நோக்கி பயணிக்கவில்லை என்று கூறமுடியாது அல்லவா? அப்படித்தான் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களும் சித்திக்கு அண்மித்தவர்களும் சித்திபெறத் தவறியவர்களும். உண்மையில் பிள்ளைகள் திறமையானவர்களாக இருப்பதாலேயே எம்மைப்போன்ற ஆசிரியர்கள்  பெருமை கொள்கின்றோம். வெற்றி பெற்றவர்களுக்காக எவ்வாறு உரிமை கொண்டாடுகின்றோமோ அவ்வாறே வெற்றிபெறத் தவறியவர்களுக்குமான தார்மீகப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். எல்லோரும் எமக்கு பிள்ளைகளே! வெற்றி பெற்றவர்களை வாழ்த்தவும் வெற்றிபெறத் தவறியவர்களை தட்டிக்கொடுத்து பாராட்டி ஊக்கப்படுத்தவும் வேண்டும். அவர்களை எதிர்கால உலகிற்கு தயார்ப்படுத்த வேண்டும். வெறுமனே தரம் 5 உடன் கற்றல் செயற்பாடுகள் முடியப்போவதில்லை என்பதை உணர்த்தி மேற்கொண்டு வரும் படிப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஊட்டவேண்டும். அவர்களை தோல்வியடைந்தவர்களாக காட்டாது வெற்றிக்காக போராடியவர்களாக காட்டவேண்டும். வெற்றி என்பது ஒருநாள் சாத்தியமாகும் என்பதை நம்ப வைக்கவேண்டும். இது ஒரு ஆசிரியராக நான் மட்டுமல்ல பெற்றோரும் உணர்ந்து செயற்படவேண்டிய தருணமாகும். ஆகவே வெற்றி பெற்றவனை பாராட்டும் அதேவேளை வெற்றிக்காக உழைத்த பிஞ்சுகளை உதாசினப்படுத்தாமல் அடுத்துவரும் தடைகளை தாண்ட ஊக்கப்படுத்தவும் வேண்டும். மேலும் 10℅ மாணவர்களே வெட்டுப்புள்ளிக்கு மேலே எடுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட இப்பரீட்சையில் பந்தயக்குதிரைகளாக பிள்ளைகள் ஓடினாலும் 90℅ மாணவர்கள் தோல்வி அடையவே வேண்டும். இதுவே நியதி. அதைத்தெரிந்தே பெற்றோராயினும் ஆசிரியராயினும் பந்தயத்தில் ஓடுகின்றனர். மிகச்சொற்பமானோர் இலக்கை அடைய பெரும்பாலானோர் இலக்கை அடையத் தவறுவார்கள். எப்படியாயினும் இந்த பந்தயத்தில் அனைவரும் ஓடியே ஆகவேண்டும். எல்லாம் செப்படி வித்தை என்று விடவேண்டியதுதான். அது ஒரு புறம் இருக்க , எனது பிள்ளைகளின் வெற்றிக்கும் தோல்விக்கும் நானே பொறுப்பு என அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்