Mon. Apr 29th, 2024

மணற்காடு சவுக்கம் தோப்பை வனவளத்துறை மற்றும் பிரதேச செயலகம் இணைந்து மரங்களை நாட்டி பராமரிக்க ஏற்பாடு

மணற்காடு சவுக்கம் தோப்பு பகுதியை வனவள அமைச்சு சுவீகரிக்கும் திட்டம் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
இன்று (5) வனவளத் திணைக்களத்தினரால் குறித்த பகுதியை பார்வையிடச் சென்ற போதே அப்பகுதி மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை யாழ் மாவட்டத்தில் உள்ள காணிகளை வன வள திணைக்களம் சுவீகரிக்கும் நோக்கில் வனவள அமைச்சர் தலைமையில் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அதன்  தொடர்ச்சியாக மக்களால் நாட்டி வளர்க்கப்பட்ட மணல்காடு சவுக்கம்  தோப்பு பகுதியையும் வர்த்தமானியில் பிரசுரித்து வன வள திணைக்களத்தின் கீழ் கொண்டுவருவதற்காக இன்று  பார்வையிடுவதற்காக பிற்பகல்  மணல்காடு பகுதிக்கு வனவளத்துறை அமைச்சர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், மற்றும் அதிகாரிகள் சென்றிருந்தனர்.
குறித்த அதிகாரிகளின் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மணல்காடு கிராம
மக்கள் வழிமறிக்கப்பட்டது.
இதனை வன வள திணைக்களத்தின் கீழ் கொண்டுவருவதை உடனடியாக கைவிடுமாறும், அவ்வாறு கொண்டுவருவதானால் தமது பல ஏக்கர் காணிகள், மற்றும் எதிர்கால சந்ததிகளின் குடியேற்றம் என்பன பாதிக்கப்படும் என வலியுறுத்தினர். வழமை போன்று பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டில் வைத்து சமூக காடாகவே இருக்கும் வகையில் ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். அதற்கு வனவளத்துறை அமைச்சர் அதனை கிராம காடு எனும் புதிய செயற்றிட்டம் ஒன்றை உருவாக்கி  வர்தமானி மூலம் அறிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போதும் அதனையும் மக்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
தொடர்ந்து மக்களுடன் வனவளத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் அடிப்படையில் வர்த்தமானி மூலம் சுவீகரிக்காது வனவள அமைச்சு பிரதேச செயலகத்துடன் இணைந்து மணற்காடு மக்களும்  மேலும் மரங்களை நாட்டி பராமரிக்க தான் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் மக்கள் தமது எதிர்ப்பை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதே வேளை கடந்த வருடம் வனவளத்துறை திணைக்களம் குறித்த சவுக்கம் தோப்பு பகுதியை எல்லையிட வந்தபோது மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதன் அடிப்படையில் அது கைவிடப்பட்டிருந்தது.
பருத்தித்துறை பிரதேச சபை, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் என்பன  மணற்காடு கிராம அபிவிருத்தி சங்கத்தினருடன் இணைந்து சுற்றுலா மையம், பொழுது போக்கு மையம் என்பனவும் பல இலட்சம் செலவு செய்து அமைத்துள்ளதுடன் குறித்த சவுக்கம் தோப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாட்டிவைத்ததுடன், 1990 களுக்கு பின்னர் மக்களும் விடுதலை இயக்கம் ஒன்றும் இணைந்து சவுக்கம் தோப்பாக மாற்றியமைத்தமையும் இங்கு குறிப்பிடதக்கதாகும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்