Tue. May 7th, 2024

பொது மக்கள் குப்பை போட மறுப்பு, தவிசாளர் விளக்கம்

கரவெட்டி பிரதேச சபையால் குப்பை கொட்டுவதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பொதுமக்கள் குப்பை போடுவதற்கு கரவெட்டி பிரதேச சபையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் அவர்களிடம் தொடர்பு கொண்ட கேட்ட போது,

கரவெட்டி பிரதேச சபையால் குப்பை போடுவதற்கான இடம் மண்டான் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலமும் பொது மக்களை கட்டுப்பாடின்றி குப்பை போடுவதற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் பொது மக்களால் வாழைக் குற்றிகள் மற்றும் தென்னங் குற்றிகள் போன்றவற்றை முறையற்ற விதத்தில் குப்பை போடும் பகுதியில் போட்டுச் சென்றுள்ளனர். இதனால் குப்பையை உரிய இடத்தில் உழவு இயந்திரங்களால் கொண்டு சென்று கொட்டுவதற்கு எமது ஊழியர்கள் பெரும் சிரமத்தை எதிர் கொண்டுள்ளனர். இதனை ஒழுங்கமைக்கும் முகமாக பல லட்சம் ரூபா செலவில் குப்பை கொட்டும் இடம் புனரமைக்கப்பட்டு கண்காணிப்பதற்காக பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளது. முள்ளி பகுதியில் குப்பைகளை மீள் சுழற்சி செய்யும் இடத்தின் வேலைகள் நிறைவடைந்து தற்போது திறப்பு விழா செய்வதற்கு நாள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் இந்நிகழ்வு நடாத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் எமது பிரதேச சபை உழவு இயந்திரம் வருகின்றது.  அதில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் எழுத்து மூலமாக எமக்கு தெரியப்படுத்தவும். பொது மக்கள் தமது வீட்டு மலக் கழிவுகள் மற்றும் பம்பஸ் போன்றவற்றை முறையற்ற வகையில் கொட்டுகிறார்கள். இதனால் எமது ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  இதனால் முள்ளி பகுதியில் உள்ள மீள் சுழற்சி செயற்பாடு ஆரம்பிக்கும் வரை மக்கள் குறித்த பகுதியில் குப்பை போடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீதியில் குப்பை வீசுவோர் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு கமராக்களும் பொருத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்