Sun. May 19th, 2024

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு கைவிரல் அடையாள இயந்திரம் பொருத்தப்படமால் இருக்கும் அதிபர்கள் மீதும், அவர்களை மேற்பார்வை செய்யாமல் இருக்கும் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு கைவிரல் அடையாள இயந்திரம் பொருத்தப்படமால் இருக்கும் அதிபர்கள் மீதும், அவர்களை மேற்பார்வை செய்யாமல் இருக்கும் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையில் விளையாட்டினை அபிவிருத்தி செய்யும் நோக்கில்  2019ம் ஆண்டு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்களின் கடமை நேரமாக காலை 6 மணி முதல் காலை 11 மணி வரைக்கும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும் என நியமனக் கடிதத்தில் 8 மணித்தியாலங்கள் கடமை புரிய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில பயிற்றுவிப்பாளர்கள் தவிர ஏனையோர் தமது கடமை நேரத்தை பூர்த்தி செய்வதில்லை. அரச உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமை நேரத்தை பூர்த்தி செய்யாமல் சம்பளம் பெறுவது நிதி மோசடி செய்யும் குற்றமாகும். தற்போது குறித்த பயிற்சியாளர்களின் நியமனங்கள் வழங்கப்பட்டு 5 வருடங்கள் பூர்த்தி அடைந்த நிலையில் வடமாகாணத்தில் விளையாட்டுத் துறையில் வளர்ச்சி கண்டுள்ளதா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அதிபர்கள் சிலர் தமது அலுவலக வேலைகளை கொடுத்து, அவர்களின் பயிற்சி கொடுக்கும் நேரத்தை குறைத்து கையொப்பம் இட அனுமதிக்கின்றார்கள். அத்துடன் பயிற்றுவிப்பாளர் சிலர் குறித்த நேரத்தில் தமது கடமைகளை செய்யாமலும், பாடசாலைகளுக்கு வருகை தராமலும் தமது சொந்த விடயங்களை பார்த்து விட்டு பின்னர் வருகின்ற நாட்களில் வருகை தராத நாட்களிலும் கையொப்பம் இடுகிறார்கள். இதனால் வருகை தராத நாட்களில் இவர்கள் ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டு இருந்தாலும், பொலீஸார் விசாரணையில் பாடசாலையில் கடமையில் நின்றதாகவே கருதப்படும். இதனால் குறித்த அதிபரும், மேற்பார்வை செய்யும் பொறுப்பிலும் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களுமே பதில் கூற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆசிரியர்கள் உட்பட அரச உத்தியோகத்தில் ஈடுபடும் அனைவருக்கும் கைவிரல் அடையாள இயந்திரம் மூலம் லீவுகள் கணிப்பிடும் போது பயிற்றுவிப்பாளர்களுக்கு மாத்திரம் கைவிரல் அடையாள இயந்திரம் பொருத்தப்படாமைக்குரிய காரணம் என்ன. வடமாகாணத்தில் ஒரு சில பயிற்றுவிப்பாளர்கள் தவிர ஏனையோர் தமது பயிற்சிகளை முறையாக வழங்குவதில்லை. இவர்களின் கடமைகள் தொடர்பாக மேற்பார்வை செய்யும் பொறுப்பில் இருக்கும் வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் பலர் பயிற்றுவிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுகிறார்களா எனவும் மேற்பார்வை செய்யவும் தவறுகின்றனர். பாடசாலைகளில் மாணவர்களின் கல்வி நிலையை மேற்பார்வை செய்ய மாகாண மற்றும் வலய குழுக்கள் பாடசாலைக்கு வருகை தந்து அடைவு மட்டத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஏன் பயிற்றுவிப்பாளர்களை மேற்பார்வை செய்ய தவறுகின்றனர். அத்துடன் பல பயிற்றுவிப்பாளர்கள் பலரிடத்தில் தமது நோக்கம் என்ன? அதனை அடைவதற்கு என்ன திட்டம் உள்ளது என எதுவித அறிக்கையும் இல்லாமலேயே கடமை புரிகின்றனர். இதனால் விசுவாசமாக அடிமட்டத்தில் இருக்கும் மாணவர்களை இனங்கண்டு பயிற்சி கொடுத்து வெற்றி பெற வைக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் இழுக்காக அமைகின்றது. இவர்களுக்கு கைவிரல் அடையாள இயந்திரம் பொருத்தப்பட்டால் கட்டாயமாக அவர்கள் 8 மணித்தியாலங்கள் கடமை புரிய வேண்டும். பிற்பகல் நேரம் ஏன் பயிற்சி வழங்குவதில்லை என வினவிய போது, மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்கின்றனர் என குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 5 மாணவர்களாவது தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்வதில்லை. இவர்களை அழைத்து தனிப் பயிற்சிகளை வழங்க முடியும். ஆனால் அவர்கள் பயிற்சி வழங்குவதில்லை. எனவே இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு பயிற்றுவிப்பாளர்களுக்கு கைவிரல் அடையாள இயந்திரம் பொருத்தப்படுவதுடன் உரியவர்கள் மேற்பார்வை செய்வதை உறுதிப்படுத்துவதற்கு வடமாகாண செயலாளர், வடமாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் வடமாகாண உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கவனம் எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்