Tue. May 7th, 2024

உலக உணவு திட்டத்தின் அவசரகால பணஉதவித் திட்ட மீளாய்வு கலந்துரையாடல்

உலக உணவு திட்டம் இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களது உயிர்களைக் காப்பாற்றவும், அதிகரித்துவரும் உணவுப்பாதுகாப்பின்மையைத் தணிக்கவும் அவசர வேலைத்திட்டங்களில் அதிககவனம் செலுத்தி வருகிறதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்திலிருந்து முல்லைத்தீவு, காலி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இனங்காணப்பட்ட உணவுப்பாதுகாப்பற்ற மக்களுக்கு பண உதவியினை வழங்குத் திட்டத்தினை முதல் முதலாக நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது.

இத் திட்டத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தில் 30, 292 பயனாளிகளை உள்வாங்கி கடந்த ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் குறித்த உதவித் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தது.

இந் நிலையில் குறித்த திட்டம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் காலை 11.00 மணிக்கு மாவட்ட செயலக பேரவை மண்டபத்தில் Zoom செயலி ஊடாக இடம்பெற்றது.

இதன்போது பெண்தலைமைத்துவ குடும்பங்கள், நாட்பட்ட நோய்களைக் கொண்ட பயனாளிக்குரிய கொடுப்பனவுகள், உணவுப் பொதி வழங்குவதற்கான பயனாளி தெரிவுகள், பயனாளிகளுக்கான உதவித்தொகை பெற்றுக்கொள்வதற்கான இரகசியக்குறியீட்டு நடைமுறைகள், பயனாளி தெரிவுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள், பிரச்சினைகள், தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தில் 14,071பயனாளிகளின் தரவுகள் ஆறு பிரதேச செயலகங்கள் ஊடாக தரவு வடிவமைப்பு இடம்பெற்று, சர்வோதயம் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஊடாக பயனாளிகளின் தரவுப் பகுப்பாய்வு நிறைவடைந்துள்ளதுடன், முதற்கட்டமாக கர்ப்பிணி தாய்மார்கள், பாலுட்டும் தாய்மார்கள், விசேட தேவைக்குட்பட்ட குடும்பங்கள் 3,083 பேருக்கு தலா 15 000ரூபா வெஸ்ரன் பணப்பரிமாற்றல் சேவை நிறுவனம் ஊடாக வைப்புச்செய்யப்பட்டு, பணத்தை வழங்கியுள்ளதுடன் மேலும் தொடர்ந்து ஏனையவர்களுக்கு குறித்த உதவித்திட்டம் வழங்கப்படவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ம.கி .வில்வராஜா, உலக உணவுத் திட்டத்தின் மாவ‌ட்ட பொறுப்பதிகாரி ஜெயபவாணி, மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம் .முபாரக், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், , மாவட்ட உலக உணவுத்திட்ட நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் வ.கஜானனன், சர்வோதயம் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்