Tue. May 7th, 2024

இடமாற்றங்கள் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தலையீடு இடம்பெற வேண்டும் – ஆசிரியர்கள் வேண்டுகோள்

வடமாகாணத்தில் இடம்பெறும் இடமாற்றங்கள் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தலையீடு இடம்பெற வேண்டும் என பாதிக்கப்படும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வடமாகாணத்தில் இடம்பெறும் ஆசிரிய இடமாற்றங்கள் முறையற்ற வகையில் இடம்பெறுகின்றன. வலயக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள் என அரச அதிகாரிகளின் உறவினர்களுக்கு வெளிமாவட்ட இடமாற்றங்கள் வழங்கப்படாமல் இருப்பதும், சிலர் அதே பாடசாலையில் கற்று அதே பாடசாலைக்கு நியமனம் பெற்று அதன் பின்னர் சிறிது காலம் மாத்திரம் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று மீண்டும் அதே பாடசாலைக்கே கடமையைப் பொறுப்பேற்கின்றனர். இதனால் புதிய விடயங்களை பாடசாலையில் அறிமுகப்படுத்த முடியாமல் உள்ளதோடு, நிர்வாக செயற்பாடுகளுக்கும் இவர்களின் ஆதிக்கம் நிலவுவதாகவும் சுட்டிக் காட்டி உள்ளனர்.
ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படும் போது, Emis இல் தரவேற்றம் செய்யப்பட்டதை பார்க்காது அவர்களின் சுயவிபரக் கோவையை, பரிசீலணை செய்து இடமாற்றங்கள் வழங்கப்பட வேண்டும். பலர் Emis இல் தவறான பதிவுகளைக் கொடுத்து வைத்துள்ளனர். இதனால் பலரது பெயர்கள், இடமாற்ற பட்டியலிலேயே இல்லாமல் உள்ளது.
உதாரணமாக தீவக கல்வி வலயத்தில் கடல் கடந்து பணிபுரியாமல் சிறு தூரங்களுக்கு சென்றவர்களும்,  வடமராட்சி கிழக்கில் பணிபுரிந்து விட்டு தாம் அதிகஸ்ட்ட பிரதேசம் நிறைவு செய்துள்ளதாகவும் பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் கணவன் தனது வெளிமாவட்ட சேவைக்காலத்தை நிறைவு செய்துவிட்டு, மனைவியின் சேவைக்காலத்தையும் சிறிது வருடம் சேவையாற்றிவிட்டு அவர்களும் இடமாற்றம் பெற்றுச் சென்று விடுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளினாலேயே யாழ்மாவட்டத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
யாழ்மாவட்டத்தில் பல பாடசாலைகளில் பல பாட ஆசிரியர்கள், மேலதிக செயற்பாடுகள் இன்றி 20 பாடவேளையில் கற்பித்து வருகின்றனர். ஆனால் வெளிமாவட்டத்தில் இருக்கும் ஆசிரியர்கள் பலர் 40 பாடவேளையில் உள்ளனர். இது வளத்தை வீணடிப்பதுடன்,  நிதியுடன் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். இதுதொடர்பாக அதிபர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மாணவர்களை அதிகம் கொண்ட பிரபல பாடசாலை ஆசிரியர்கள் பலருக்கும் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படுவதில்லை. இதுதொடர்பாக உரியவர்களிடம் கேட்டால், குறித்த பாடசாலை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு பொருத்தமான ஆசிரியர்கள் இல்லை எனக் குறிப்பிடுகின்றனர். ஏனைய பாடசாலை மாணவர்களுக்கு இவர்களின் சேவை தேவையில்லையா? அல்லது ஏனைய ஆசிரியர்கள் ஆளுமை அற்றவர்களாக? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே அனைவருக்கும் சமமான சேவைகள் கிடைக்க வேண்டுமாயின், ஒவ்வொரு ஆசிரியரதும் சுயவிபரக் கோவையை பார்வையிட்டு அவர்களின்,  வயதினை கருத்தில் கொண்டு இடமாற்றங்கள் வழங்கப்பட்ட வேண்டும். சில ஆசிரியர்கள் தமது உண்மைக்குப் புறம்பான தகவல்களை பதிவிட்டு, இடமாற்ற பட்டியலில் இருந்து விலக்கி இடமாற்ற வயதுவரை காலத்தை இழுத்தடிப்புச் செய்து வெளிமாவட்ட சேவையை தவிர்த்து வருகின்றனர்.
எனவே இதுதொடர்பாக,  மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தலையிட்டு முறையான இடமாற்றங்கள் இடம்பெற வழிவகுக்க வேண்டும் எனவும்  பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்