Mon. Apr 29th, 2024

வெள்ளிவிழாவில் கால் பதிக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகானது பல்வேறு செயற்றிடங்கள்

வெள்ளிவிழாவில் கால் பதிக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகானது பல்வேறு செயற்றிடங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக விளையாட்டு விஞ்ஞான அலகு மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் 25 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்வுகள் இறுதித் தருணத்தினை எட்டியுள்ளன. இவ் விளையாட்டு விஞ்ஞான அலகானது 1998 இல் ஆரம்பிக்கப்பட்டு இற்றைக்கு 25 வருடங்களை பூர்த்தி செய்து வெற்றிகரமாக பல் நூறு விளையாட்டுத்துறை சார்ந்த விற்பன்னர்களை உருவாக்கியுள்ளது. முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர். பொன்.பாலசுந்தரம்பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்ட இத் துறையானது பல இடர்களை கடந்து இந்நாள் துணைவேந்தர் பேராசிரியர்.சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா அவர்களின் அளப்பரிய முயற்சியின் பயனாக பட்டப்படிப்பாக உயற்சிபெற்றது. 1998 ஆம் ஆண்டு டிப்ளோமா கற்கை நெறியாக ஆரம்பிக்கப்பட்ட இத் துறையானது மாகாண மட்டம் மட்டுமல்லாது தேசிய ரீதியில் பிரகாசிக்கும் உடற்கல்வி விற்பன்னர்களை உருவாக்கியுள்ளது. 2000 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் வடமாகாண விளையாட்டு துறையில் பாரிய முன்னேற்றங்கள் இத் துறைவழி உருவாக்கப்பட்ட உடற்கல்வி பேராசான்களாலேயே ஏற்படுத்தப்பட்டது. தற்போதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் முதன்முதலில் 2 வருட முழுநேர உடற்கல்வி கற்கைநெறியை வழங்கிய முன்னோடி பல்கலைக்கழகம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகும். இத் துறைசார்ந்த மாணவர்கள் சர்வதேச பாடவிதானங்களை உள்ளடக்கிய விளையாட்டு விஞ்ஞானம் சார்ந்த பல்துறை அலகுகளை செய்முறை , அறிமுறை ரீதியாக கற்றுத் தேர்ந்து வடமாகாண விளையாட்டின் விருத்தியில் வியக்கத்தகு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர்.
இன்று இத்துறையானது 25 ஆண்டுகளை கடந்து காலடி பதிக்கிறது. இத்தருணத்தில் பழைய மற்றும் சமகால மாணவர்கள் இணைந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டுக்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றனர். இந் நிகழ்வுகளின் ஓர் அங்கமாக எதிர்வரும் 02 ஆம் திகதி பாரிய குருதிக்கொடை  முகாம் ஒன்று விளையாட்டு விஞ்ஞான அலகில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலை ‘உடல் உறுதி நோக்கிய நடை’ எனும் தொனிப்பொருளில் நடைப்பயிற்சியின் உன்னத மகிமையினையையும் சிறார்களை விளையாட்டில் ஈடுபடுத்தும் நிலையினை மேம்படுத்துவதனையும் மையமாக கொண்ட விழிப்புணர்வு நடைபவனி  காலை 07.30 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ் வெள்ளிவிழாவின் இறுதி நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வும் பல்கலைகழக உள்ளக விளையாட்டு அரங்கில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ் வெள்ளிவிழாவானது பல்வேறு வகுதியினரை உள்ளடக்கி விளையாட்டுப் போட்டிகளை நடாத்தியுள்ளது. அரச திணைக்கள ஊழியர்களின் உடல் உள ஆரோக்கியம் சார்ந்த மென்பந்து கிரிக்கெட் போட்டிகளையும் பாடசாலைமட்ட வளர்ச்சிக்காக பூப்பந்தாட்ட மற்றும் உதைபந்தாட்ட போட்டிகளையும்  கழகமட்ட உதைபந்தாட்ட மற்றும் கூடைப்பந்தாட்ட போட்டிகளையும்  கிராமிய விளையாட்டினை மேம்படுத்தும் நோக்கில் கிளித்தட்டு போட்டியினையும் ஏற்பாடுசெய்து நடாத்தி வருகிறது.
இதன் இறுதிநாள் நிகழ்வில் ஆண் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் வெகுவிமர்சையாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“இவ் இறுதி நிகழ்விற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்