Mon. Apr 29th, 2024

வலி மிகுந்த வாரங்கள் காத்திருக்கிறது.. 2 லட்சம் பேரின் உயிருக்கு ஆபத்து.. டிரம்ப் பகீர் வார்னிங்

அமெரிக்காவில் கொரோனா காரணமாக வலி மிகுந்த வாரங்கள் இனிமேல்தான் வர போகிறது, மக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மோசமான தோல்விகளும், அழுத்தங்களும் மனிதர்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றும். மோசமான சூழ்நிலைகள் மக்களின் குணத்தை அப்படியே மாற்றும் சக்தி கொண்டது. தற்போது உலகை தாக்கி வரும் கொரோனா அமெரிக்க அதிபர் டிரம்பின் மனநிலையை மாற்றி உள்ளது. எப்போதும் செய்தியாளர் முன், அதெல்லாம் கவலை இல்லை. நான் அதை பார்த்துக்குறேன். அமெரிக்காவிற்கு பிரச்சனை இல்லை. நம்மிடம் போதுமான வசதி உள்ளது, என்று பேசும் டிரம்ப், முதல் முறையாக தன்னுடைய தோல்வியை ஏறத்தாழ ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆம், கொரோனாவிற்கு எதிரான தோல்வியை கிட்டத்தட்ட அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்றுதான் கூற வேண்டும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில், மிக மோசமான இரண்டு வாரங்கள் இனிதான் நமக்கு காத்து இருக்கிறது. அடுத்து வரும் நாட்கள் மிகவும் வலி மிகுந்த நாட்களாக இருக்க போகிறது. மிக மிக வலி மிகுந்த நாட்களை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். நாம் வாழ்வா அல்லது சாவா என்ற நிலையில் இருக்கிறோம். நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்.

உலகை தாக்கிய பிளேக் நோய்க்கு இணையான நோயை நாம் எதிர் கொண்டு இருக்கிறோம் .ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை இதனால் அமெரிக்காவில் பலியாக வாய்ப்புள்ளது. ஆம் , அமெரிக்கர்கள் கண்டிப்பாக வீட்டிற்குள் இருக்க வேண்டும். ஆனால் அமெரிக்கர்கள் வீட்டிற்குள் இருந்தாலும் கூட, இந்த பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் ஆகும்.

இதற்கு இப்பொது மருந்து எதுவும் இல்லை. மேஜிக் போல இந்த நோயை மறைய வைக்க முடியாது. அடுத்த 30 நாட்களுக்கு இந்த வைரஸ் வீரியம் அதிகம் ஆகும். இதன் பண்புகள் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று டிரம்ப் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் உள்ள மூத்த குழு ஒன்றுதான் கொரோனா குறித்து டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது அமெரிக்காவில் 100,000 முதல் 240,000 பேர் பலியாகலாம் என்று இவர்கள்தான் கூறியுள்ளனர்.

கொரோனாவிற்கு எதிரான சண்டையில் அமெரிக்கா பெரிய அளவில் சரிவை சந்தித்து இருக்கிறது. நேற்று மட்டும் அமெரிக்காவில் 865 பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 188,578 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தமாக 3,890 பேர் பலியாகி உள்ளனர். தினமும் சராசரியாக அங்கு 20 ஆயிரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்