Sat. May 4th, 2024

வடமாகாணத்தில் ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தில் முறைகேடு – ஆசிரியர்கள் விசனம்

வடமாகாணத்தில் ஆசிரியர்களுக்கான இடமாற்ற கொள்கையை கடைப்பிடிக்காமல் இடமாற்றங்கள் இடைபெறுவதாக ஆசிரியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வடமாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படும் போது பாடசாலையின் ஆசிரிய ஆளணிகளை கருத்தில் கொள்ளாது சில பாடசாலைகளில் மேலதிக ஆசிரியர்களும்,  சில பாடசாலைகளில் குறித்த பாடங்களுக்கான பற்றாக்குறையும் நிகழ்கின்றது. சில பாடசாலைகளில் மேலதிக ஆசிரிய நியமனங்களை வழங்கி,  அதன் பின்னர் அவர்களை வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றுவதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனால் பாடசாலைகளில் தமக்குரிய இடமாற்ற காலம் முடிவடைவதற்கு முன்னர் கற்பிக்கும் சிரேஷ்ட ஆசிரியர்களுக்கான இடமாற்றமும், வழங்கப்படுகிறது. தங்களுடைய சேவைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர், செல்வாக்குகளின் அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது எந்த வகையில் நியாயம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன் பல ஆசிரியர்கள் தமது நியமன பாடத்தை கற்பிக்காமல்,  தமது நியமன வகையையும் மாற்றிக் கொள்ளாமல் தமக்கும் குறித்த பாடங்களை கற்பிக்க அனுமதிக்க வேண்டுமென முரண்பாட்டில் ஈடுபடுகின்றனர். இதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள்,  குறித்த பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் தற்போது, கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இருந்து ஆசிரிய பயிற்சியை நிறைவு செய்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கான இடமாற்றத்திலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலரை தேவை கருதிய இடமாற்றம் என்ற வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றங்கள் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டது என்பது மாகாண கல்வித் திணைக்களத்தால் வெளியிடப்படவில்லை.
அத்துடன் தமது முதல் நியமனத்தை வெளி மாவட்டங்களில் பெற்றுக் கொள்ளும் ஆசிரியர்கள் மாத்திரம் தமது சேவையை 8 வருடங்கள் நிறைவு செய்த பின்னரும் பல போராட்டங்களின் அடிப்படையிலேயே இடமாற்றம் பெற வேண்டியுள்ளது. ஆனால் யாழ்மாவட்டத்தில் முதல் நியமனங்கள் பெற்றவர்கள் சேவையின் தேவைகருதிய இடமாற்றத்தில், இருவருடங்களோ அல்லது ஆகக் கூடுதலாக மூன்று வருடங்களோ கடமையாற்றி வருகின்றனர். இது எந்த வகையில் நியாயம். ஆசிரியர்கள் தமது சேவைக்காலத்தில் கட்டாயமாக தமது நியமன கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வெளிமாவட்ட சேவையை நிறைவு செய்ய வேண்டும் என்பதனை ஆசிரிய சங்கங்கள் உட்பட எவரும் ஏன் வலியுறுத்துவதில்லை. சிலர் தமது 50 வயது வரை இடமாற்ற காலத்தை கடத்திவிட்டு வயதை ஒரு காரணம் காட்டி இடமாற்றம் பெறாது விடுகின்றனர். இடமாற்றம் என்றால் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். இதில் உரிய தரப்பினர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்