Sat. May 4th, 2024

மதுசாந்தின் ஹற்றிக் கோலையும் தகர்த்தெறிந்து சம்பியனாகியது அல்வாய் மனோகரா அணி

பருத்தித்துறை லீக் தமது பொன்விழா ஆண்டை முன்னிட்டு யாழ் மாவட்ட ரீதியாக நடாத்திய அணிக்கு 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் பரபரப்பு நிறைந்த இறுதியாட்டத்தில் அல்வாய் மனோகரா அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
யாழ் மாவட்டத்திலிருந்து 41 அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப் போட்டியின் இறுதியாட்டத்தில் வடமராட்சி லீக்கின் அங்கத்துவ கழகங்களான கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர் அல்வாய் மனோகரா அணி மோதியது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில்  ஆரம்பமானது ஆட்டம். இரு அணி வீரர்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். முதல் பாதியாட்டத்தில் காற்றின் எதிர்ப்பின் மத்தியிலும் றேஞ்சஸ் அணியினர் தமது கட்டுப்பாட்டிற்குள் பந்தை வைத்திருந்து மனோகரா அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர்.
ஆட்டம் மிகவும் வேகமாக நடைபெற்று கொண்டிருந்தவேள றேஞ்சஸ் அணிக்கு மூலை உதை கிடைத்தது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் மதுசாந் அவர்களால் தனது அணிக்கான 1வது கோல் தலையால் அடித்து பெறப்பட்டது. ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கையில் 27வது நிமிடத்தில் மீண்டும் மதுசாந் அவர்களால் தனது அணிக்கான 2வது கோலும் பெறப்பட்டது. ஆட்டம் தொடர்கையில் மீண்டும் 33வது நிமிடத்தில் றேஞ்சஸ் அணிக்கு தண்டனை உதை கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி மதுசாந் அவர்களால் தனது அணிக்கான ஹற்றிக் கோல்களினால் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி 3:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இரண்டாம் பாதியாட்ட ஆரம்பத்தில் இரு அணிகளும் புதிய வியூகங்களோடு களமிறங்கியது. ஆட்டம் றேஞ்சஸ் பக்கம் சென்று கொண்டிருக்கையில் 49வது நிமிடத்தில் மனோகரா அணியின் வீரர்  சாருஜனால் தனது அணிக்கான மிகச் சிறப்பான முதலாவது கோலினை பெற தாமும் கிண்ணத்தை சுவீகரிக்க முடியும் என்ற முனைப்புடன் ஆட்டத்தை வேகப்படுத்தியது மனோகரா அணி.
அடுத்த 2நிமிடங்களில் மனோகரா அணிக்கு தண்டனை உதை கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்திய சுஜாந் அவர்களால் தமது அணிக்கான 2வது கோல் பெறப்பட்டது.மீண்டும் சுஜாந் அவர்களால் 56வது நிமிடத்தில் சிறப்பான முறையிலே தமது அணிக்கான மூன்றாவது கோல் பெறப்பட்டது. இரு அணிகளின் கோல்களின் எண்ணிக்கை சமநிலை பெற ஆட்டம் விறுவிப்பின் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் ரசிகர்கள் இருக்கைகளின் நுனிக்கே வந்து விட்டனர்.
தொடர்ந்து ஆட்டம் நடைபெற்று கொண்டு இருக்கையில் 60வது நிமிடத்தில் மனோகரா அணி வீரர் சாருஜன் அவர்களால் தமது அணிக்கான 4வது கோல் பெறப்பட்டது. மனோகரா அணியின் 4வது கோல் பெறப்பட்டதும் பதிலுக்கு அடுத்த நிமிடத்திலையே றேஞ்சஸ் அணி வீரரர் துசாந் அவர்களால் பதிலடி கொடுக்கப்பட்டு மீண்டும் ஆட்டம் 4:4 என்று ஆட்டம் சமநிலையை நோக்கி சென்று கொண்டிருக்கையில் ஆட்டம் முடிவடைய 10 நிமிடங்கள் இருக்கையில் மனோகரா அணிக்கு மீண்டும் தண்டனை உதை கிடைக்கவே அவ்வணி வீரர் சுயாந் அதனை கோலாக மாற்ற ஆட்டநேர முடிவில் 5:4 என்ற கோல் கணக்கில் பொன்விழா கிண்ணத்தை கைப்பற்றியது மனோகரா அணி. போட்டியின் சிறந்த கோல்காப்பாளராக றேஞ்சஸ் அணி வீரர் ஆர்நிகனும் , தொடராட்ட நாயகனாக றேஞ்சஸ் அணி வீரர் மதுசாந் அவர்களும் , சிறந்த பின்கள வீரனாக றேஞ்சஸ் அணி வீரர் மாதுஜனும், ஆட்ட நாயகனாக மனோகரா அணி வீரர் மற்றும் சிறந்த ஆட்ட நாயகனாக சுயாந், அதிக கோல்களைப் பெற்ற வீரர் விண்மீன் அணி வீரர் நிதுசன், வளர்ந்து வரும் வீரர் விண்மீன் அணி வீரர் றெனோசன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்