Sun. Apr 28th, 2024

நாளை பெற்றோர் வீண் சிரமங்களை தவிர்க்கவும்

நாளை அதிபர் ஆசிரியர் சுகயீன லீவு போராட்டம்: வீண் சிரமங்களை பெற்றோர் தவிர்க்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையிலுள்ள அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளைய தினம் 25.04.2022 திங்கட்கிழமை பாடசாலைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் . அன்றைய தினம் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அக்கறையுடன் செயற்படுமாறும் – இன்றைய பொருளாதார நெருக்கடியுள்ள சூழலில் வீணான சிரமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
வடமாகாண கல்வித் திணைக்களத்தால் அன்றைய தினம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த இடைநிலை பிரிவுக்கான பரீட்சைகளை வேறொரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறு கோரியுள்ளோம்.
எரிபொருள் பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் – மாற்றீடான எமது முன்மொழிவுகளை கல்வியமைச்சு நிராகரித்தமையின் விளைவாகவே நாளைய தினம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களால் சுகயீன லீவுப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக – தூர இடங்களிலிருந்து வரும் மாணவர்களின் வரவு மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருட்களின் தட்டுப்பாடும் -விலையேற்றமும்- குடும்ப பொருளாதார நிலையும் மாணவர்களின் வரவினையும் கணிசமாக பாதித்துள்ளன. அத்துடன் – தூர பிரதேசங்களிற்கு சென்று கடமையாற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொருளாதார நெருக்கடிகளை மட்டுமல்ல – குடும்பச் சுமைகளுடன் போக்குவரத்துச் சிரமங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழலில் கடமைகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளன. வரிசையில் நின்றே நாட்டுமக்கள் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். கஸ்ட – அதிகஸ்ட பிரதேசங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் – எரிபொருள் தட்டுப்பாடான இன்றைய சூழலிலும் – விரலடையாள இயந்திர நடைமுறைகளால் தொழில் ரீதியாகவும் – உளவியல் ரீதியாகவும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சுமைகளைத் தாண்டி – எரிபொருள் பிரச்சினையால் கல்வித்துறை பெரும்பாதிக்புக்குள்ளாகியிருக்கிறது. இதனால் – தூர இடங்களுக்கு சென்று பணிபுரியும் ஆசிரியர்களையும் – கற்கும் மாணவர்களையும் அருகில் உள்ள பாடசாலைக்கு செல்லக் கூடிய செயற்பாடுகளை செய்து தருமாறும். அல்லது மாற்று திட்டங்களை வழங்குமாறும் கல்வியமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி இருந்தோம்.
எனவே – இவற்றுக்கான உடனடித் தீர்வை அரசாங்கம் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை நடைபெறும் சுகயீன லீவு போராட்டத்தில் அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களையும் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்வதுடன் – அன்றைய தினம் மாணவர்களின் பெற்றோர்கள் வீணான சிரமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்