Mon. Apr 29th, 2024

கிளிநொச்சி மாவட்ட அதிபர், ஆசிரியர்களுக்கு பெற்றோல் வழங்குங்கள்- சரா புவனேஸ்வரன் கோரிக்கை

கிளிநொச்சி மாவட்ட அதிபர், ஆசிரியர்களுக்கு பெற்றோல் வழங்காவிட்டால் மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்னால் ஒன்றுகூடி தீர்வைப் பெறுவதற்காக அமர்ந்திருப்போம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு இன்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டில் தற்போது உள்ள நெருக்கடி நிலை தாங்கள் அறிந்ததே . இந்நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான ஆசிரியர்கள் தூர இடங்களில் இருந்து கடமைக்கு வருபவர்கள். அதிலும் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர் . இதனை இதுவரை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை . சாதாரணமாக எரிபொருளுக்கு வழங்கவேண்டிய எரிபொருள் அட்டைகூட இங்குள்ள அதிபர் , ஆசிரியர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை . இது யாருடைய தவறு ? இதனால் பாதிக்கப்படுவது அதிபர் , ஆசிரியர்கள் என்பதற்கு அப்பால் மாணவர்களே . பாடசாலை சீராக இயங்குவது மாணவர்களுக்காக . மற்றைய உத்தியோகத்தரின் கடமைகளோடு ஆசிரியர்களின் கடமையை ஒப்பீடு செய்ய முடியாது . மாணவர்கள் வருகைதந்து ஆசிரியர்கள் வரவில்லையென்றால் எத்தகைய சூழ்நிலை பாடசாலையில் உருவாகும் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும் . ஆகையால் கிளிநொச்சி மாவட்ட அதிபர் , ஆசிரியர்களின் எரிபொருள் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் . தீர்வு கிடைக்கவில்லையெனில் நாம் உங்களின் செயலகம் முன்பாக ஒன்றுகூடி அதற்கான தீர்வை வேண்டி தொடர்ச்சியாக அமர்ந்திருக்க தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்