Sat. Apr 27th, 2024

இறுதிவரை திக்..திக்.. ஆட்டம், உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் உதைபந்தாட்ட தொடர், பலத்த போராட்டத்தின் பின் சென்மேரிஸ் இறுதியாட்டத்திற்கு தகுதி

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் பரபரப்பான உதைபந்தாட்ட தொடரில் சென்மேரிஸ் அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட இவ்வருடத்தின் முதலாவது மாகாண தொடர் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் சென்மேரிஸ் அணியை எதிர்த்து யங்ஹென்றீசியன் அணி மோதியது.
இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். முதல் பாதியாட்டத்தில் சென்மேரிஸ் அணி வீரர் ஜெரின்சன் தனது அணிக்கான முதலாவது கோலைப் பதிவு செய்தார். சற்றும் சளைக்காத யங்ஹென்றீசியன் அணி வீரர் சுமன் ஒரு கோலைப் பதிவு செய்து ஆட்டத்தை சமநிலைப்படுத்தினர். அதன் பின்னர் யங்ஹென்றீசியன் அணி வீரர்கள், சென்மேரிஸ் அணியின் பின்கள வீரர்களையும் ஆக்கிரமித்து ஆட்டத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதன் விளைவு யங்ஹென்றீசியன் அணி வீரர்களான இக்கினி, ஜோசப் ஆகியோர் ஒவ்வொரு கோல்களைப் பதிவு செய்து முதல் பாதியாட்டத்தில் 3:1 என்ற கோல் கணக்கில் யங்ஹென்றீசியன் அணி முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்தில் சென்மேரிஸ் அணி வீரர்கள் புதிய வியூகங்களை அமைத்துக் களம் இறங்கினர். ஆட்டம் ஆரம்பமானதும் இரு அணி ரசிகர்களுக்கும் ஆட்டம் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் சென்மேரிஸ் அணி வீரர் தர்சன் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்டம் விறுவிறுப்பின் உச்சகட்டத்தை எட்டியது. தமது வெற்றியை தக்க வைக்க யங்ஹென்றிஸ் அணி வீரர் முன்னேறித் தாக்குவதை குறைத்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஆட்டத்தை சமநிலைப்படுத்தியாவது ஆக வேண்டும் என சென்மேரிஸ் அணி வீரர்கள் தமது ஆட்டத்தை வேகப்படுத்தினர். இதனால் சென்மேரிஸ் அணி வீரர் ஜெரின்சன் ஒரு கோலைப் பதிவு செய்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தார். இறுதி நிமிடங்கள் இரு அணிக்கும் பலத்த சவாலாக அமைந்தது. தொடர்ந்து இரு அணிகளாலும் மேலதிக கோல்களை பதிவு செய்ய முடியாமல் போக ஆட்ட நேர முடிவில் இரு அணிளும் 3:3 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தனர். இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் சென்மேரிஸ் அணி 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்