Thu. May 2nd, 2024

6 நாட்களாக காணமல் போன முதியவரை கண்டால் தெரியப்படுத்தவும்

யாழ். உரும்பிராய் மேற்கு அன்னங்கையைச் சேர்ந்த 75 வயதான இரத்தினம் குணசிங்கம் என்ற முதியவரைக் கடந்த ஐந்து  நாட்களாக காணவில்லை. இதுதொடர்பாக அவரது உறவினர்களால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த முதியவர் உரும்பிராய் மேற்கு அன்னங்கைப் பகுதியிலுள்ள தனது இரண்டாவது மகன் வீட்டில் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை(12) பிற்பகல்-04 மணியளவில் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து துவிச்சக்கர வண்டியில் வீட்டிலிருந்து சென்றுள்ளார். அங்கிருந்து சுமார்-300 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள தனது மூன்றாவது மகன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கும் வீட்டில் அவரது மகன் இல்லாத நிலையில் குறித்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த தனது பச்சைநிற சேட் மற்றும் நீல நிறம் சாரம் அணிந்தவாறு உறவினர் முறையான பக்கத்து வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தனது செலவுக்கு ஒருதொகைப் பணம் வேண்டும் எனக் கேட்டு வாங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து சைக்கிளுக்கு காற்று அடிக்க வேண்டும் எனக் கூறிச் சென்றுள்ளார். சைக்கிளுக்கு காற்று அடித்துக் கொண்டு மகனின் வீட்டிற்கு அவர் செல்வார் என அவர்கள் எண்ணியிருந்த போதும் மகன் வீட்டிற்குச் செல்லவில்லை. இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை முதல் குறித்த முதியவர் காணாமற் போயுள்ளார். உரும்பிராய் மற்றும் அயற்பகுதிகள் உள்ளிட்ட யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ஊரவர்கள் இணைந்து தேடிய போதும் காணாமற்போன மேற்படி முதியவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மானிப்பாய்ப் பகுதியில் குறித்த முதியவரை நேற்றைய தினம் தேடிய போது கடந்த திங்கட்கிழமை(14) குறித்த முதியவர் மானிப்பாய்ப் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நடமாடியதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, காணாமற் போன மேற்படி முதியவரைக் கண்டுபிடிக்க அவரது உறவினர்கள் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். இதுதொடர்பில் காணாமற் போன முதியவரின் நெருங்கிய உறவினரான கபில்ராஜ் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த ஐந்துநாட்களாகத் அவரைத் தேடிய போதும் பலனளிக்கவில்லை.
எனவே, காணாமற் போன எங்கள் பெரியப்பாவைக் கண்டவர்கள் தயவுசெய்து 0776911692 அல்லது 0773162713 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் உடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்