Fri. Apr 26th, 2024

மாணவர்களுக்கான உணவில் அதிபர்கள் கையாடல்

பாடசாலைகளில் ஆரம்ப கல்வி மாணவர்களுக்கு உரிய வகையில் போசணையான உணவுகளை வழங்காது அதிபர்கள் ஏமாற்றுவதாக பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வடமாகாண பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி மாணவர்கள் அதிகம் உள்ள பாடசாலைகளிலேயே இவ்வாறான முறைகேடுகள் நடைபெறுவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தற்போதைய பணவீக்கத்தால் பலரும் பொருளாதார கஸ்டத்தை எதிர் கொள்கின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு போதிய போசாக்கான உணவை பெற்றோர் வழங்குவதற்கு திண்டாடுகின்றனர். ஆனால் அரசினால் ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான இலவச மதிய போசணைக்கான பணம் வழங்கப்படுகின்ற போதிலும் சில அதிபர்களும்,  உணவுக் குழுவில் இருக்கும் ஆசிரியர்களும் இணைந்து போசாக்கான உணவை வழங்காது,  அதற்கு வரும் பணத்தை தாமே எடுத்துக் கொள்கின்றனர்.
“சுவர் இருந்தாலே சித்திரம் வரைய முடியும் ” மாணவர்கள் உடலாரோக்கியத்துடன் காணப்பட்டாலே அவர்கள் கல்வியில் உயர்ச்சி பெற முடியும். இவ்வாறான பாடசாலைகள் தொடர்பாக கல்வி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும்,  அவர்கள் நேரடியாக பார்வையிட்டு குறைபாடு கண்டறியப்பட்ட போதிலும், அதிகாரிகளினால் அதிபர் மற்றும் உணவுக் குழு ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் பின்னரும் சில பாடசாலைகளில் அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக ஒரு நாளுக்கு உரிய பொருட்களை வாங்கி விட்டு அதிகாரிகள் வராதவிடத்து ஒரு கிழமைக்கு பாவிக்கின்றனர். இது தவிர முட்டை, நெய்தோலி போன்றன  வழங்க வேண்டிய காலத்தில் குறைந்தளவிலானவற்றை மாத்திரமே வழங்குகின்றனர்.
தண்டனைகள் உச்சமாக்கப்பட்டாலே தவறுகளை குறைத்துக் கொள்ள முடியும்.  இதனால் அதிகாரிகள் சென்று பார்வையிடும் போது, மாணவர்களுக்கான உணவில் குறைபாடுகள் கண்டு பிடிக்கப்படின் அதிபர் மீதும்,  உணவுக் குழு ஆசிரியர்கள் மீதும் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, ஒரு மாத சம்பளத்தை மாணவர்களுக்கு வழங்கி போசாக்கான உணவை பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்