Thu. May 2nd, 2024

நெல் விவசாயிகளுக்கான கடன் தொகை அதிகரிப்பு

நெல் விவசாயிகளுக்கான கடன் தொகை ஒரு லட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம்   யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று (11.11.2022 )காலை 9.30மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது யாழ் மாவட்ட மரக்கறி செய்கை விவசாயிகளுக்கும் விவசாய கடன் முறைமை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக விவசாய அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தெரிவித்தார்.  மேலும் ,நெல் செய்கை விவசாயிகளுக்கு 40,000 ரூபாவாக இருந்த விவசாய கடன் ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இவ் வருடம் பெரும்போக நெற் செய்கைக்கான உர விநியோகத்தில் 70% இரசாயன உரமும், 30% சேதன உரமும் தெரிவு செய்யப்பட்டதுடன் மாவட்டத்தில் சேதன உர விநியோகத்திற்காக  தயாராகவுள்ள
உர விநியோகத்தர்களை இனங்கண்டு அவர்களிடம் உள்ள உரத்தின் தரத்தை உறுதிசெய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், வெள்ள அழிவு, டீசல் மற்றும் மண்ணெண்ணை விநியோகம், நீர் விநியோகம், விவசாயிகளுக்கான காலநிலை தகவல்கள்,  உருளைக்கிழங்கு செய்கை, திராட்சை பழ செய்கையில் காணப்படும் நோய்த்தாக்கம்,  விதை உற்பத்தி மற்றும் விதை உற்பத்தி ஊக்குவிப்பு நடவடிக்கைகள், பால், முட்டை உற்பத்தி மற்றும் விநியோகம்
தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலின் தொடர்ச்சியாக மாவட்ட உணவுப்பாதுகாப்பு மற்றும் போசாக்கு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைந்த பொறிமுறையின் 2வது முன்னேற்றக்கூட்டமும் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கிராம, பிரதேச செயலக , மாவட்ட ரீதியாக தரவுகள் பெறப்பட்டு எதிர்பார்த்துள்ள பெரும்போக விவசாய உற்பத்தி அறுவடை, மரக்கறிகள், கடலுணவு உற்பத்திகள் தொடர்பாகவும் உணவுப்பாதுகாப்பு மற்றும் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்படும் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார் தொடர்பாக  நடைமுறைப்படுத்தப்படவுள்ள 9 திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர்,பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள்,வங்கிகளின் பிரதிநிதிகள், முகாமையளர்கள் இராணுவ அதிகாரிகள், வணிகர் சங்க பிரதி நிதிகள், கமநலஅமைப்புக்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்