Sat. Apr 27th, 2024

நாவாந்துறை செந்நீக்கிலஸ் வெற்றிக் கிண்ணத்தினை கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வசம்

நாவாந்துறை செந்நீக்கிலஸ் வெற்றிக் கிண்ணத்தினை கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி  கைப்பற்றினர்.
யாழ் லீக் அனுமதியுடன் நாவாந்துறை செந்நீக்கிலஸ் விளையாட்டு கழகம்  நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான அணிக்கு 07 நபர் கொண்ட  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று செவ்வாய்கிழமை சென்நீக்கிலஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இவ்இறுதிப் போட்டியில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து ஊரெழு றோயல்  அணி மோதியது. ஆரம்பம் முதல் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணிகளும் சிறப்பான பந்து பரிமாற்றத்தோடு ஆடினர். கோல் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆடிய இரு அணிகளும் எதிரணி கோல்பரப்பை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தன. அதன் பயனாக 09வது நிமிடத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணிக்கு தண்டனை உதை கிடைத்தது. அதனை சரியான முறையில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர்  சுஜாஸ்கான் கோலைப் பதிவு செய்ய அடுத்த நிமிடமே றோயல் அணிக்கும் தண்டனை உதை கிடைத்தது. அதனை றோயல் அணியின் வீரர் கோபன் கோலாக மாற்ற இடைவேளைக்கு முன்னர் 01:01 என்ற கோல் சமநிலை வகித்தனர்.
இரண்டாம் பாதியாட்டம் ஆரம்பத்தில் இரு அணிகளும் புது உத்வேகத்துடன் ஆடினர். கோல் பெறும் சந்தர்ப்பங்களை இரு அணியின் பின்கள வீரர்கள் மற்றும் கோல்காப்பாளர்களால் முறியடிக்கப்பட்டன. அந்த வகையில் ஆட்டத்தின் 34 வது நிமிடத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியின் பின்கள வீரன் லக்சிகன் நீண்ட தூரத்தில் இருந்து உதைத்து சற்றும் எதிர்பாராத கோலைப் பதிவு செய்தார். கோல் பெறப்பட்டதும் ஆட்டத்தின் வேகம் மேலும் அதிகரித்தது. ஆட்ட நேர முடிவில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி 02:01 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாக முடிசூட்டிக் கொண்டனர்.
ஆட்ட நாயகனாக றேஞ்சஸ் அணி வீரர் லக்சிகன் மற்றும் தொடராட்ட நாயகனாக  றேஞ்சஸ் அணி வீரர் ஆர்த்திகன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்