Tue. Apr 30th, 2024

தண்டனைகள் பெரிதாக காணப்பட்டாலே குற்றங்கள் குறையும்

குழு மோதல்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது இளைஞர்கள் பலர் நாகரிகம் என்ற பெயரில் இந்திய திரைப்படங்களை பார்த்து போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உயிர்களை சாதாரணமாக கருதி குழு மோதல்களில் ஈடுபட்டு பலரின் உயிர்களை காவு வாங்குவதுடன், அங்கங்களையும் இழக்கச் செய்கின்றனர். ஒரு குடும்பம் குடும்பத் தலைவனை இழந்தாலோ அல்லது இளைஞர் ஒருவர் அங்கத்தை இழந்தாலோ அந்த குடும்பம் எவ்வளவு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என பார்க்கத் தவறுகின்றனர்.
இதற்கு காரணம் குறித்த இளைஞர்கள் மீதான குற்றங்களுக்கு அதி கூடிய தண்டனைகள் வழங்கப்படாமையே காரணமாகும். தற்போது சாதாரண வாக்குவாதத்தில் ஆரம்பித்து இளைஞர்கள் பலர் ஒன்றுகூடி குழு மோதலில் ஈடுபடுகின்றனர். இதில் ஒருசிலர் குழுவிடம் பிடிபட்டு விட்டால் கூரிய ஆயுதங்கள், பொல்லுகள், தலைக்கவசம் மற்றும் கையில் போடும் இரும்புக் காப்பு போன்றவற்றால் எதுவித யோசனையுமின்றி தாக்கி மரணம் வரை கொண்டு செல்லப்படுகிறது. இதனால் தற்போது உள்ள இளைஞர்களுக்கு அறிவுரை கூறுவதற்கே மூத்தோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பொலீஸாரும், நீதி மன்றங்களும் கவனம் எடுக்க வேண்டும். தண்டனைகள் பெரிதாக காணப்பட்டாலே குற்றங்கள் குறையும். பெண்ணை பெற்ற தந்தை மகளை பாதுகாப்பாக வெளியில் கூட்டிச் செல்ல முடியவில்லை. தந்தைக்கு முன்னாலேயே மகளை கேலி செய்கிறார்கள். இதை தட்டிக் கேட்க முற்பட்டால் அங்கே கலவரம் உண்டாகும். எவ்வளவுதான் பிள்ளைகளுக்கு பெற்றோர் அறிவு வழங்கினாலும் அவர்கள் சேரும் சமூகம் இந்த இளைஞர் சமுதாயமே. மது, போதைப் பொருள் பாவிக்கும் இளைஞர் சமூகத்தில் ஒரு இளைஞன் பாவிக்காமல் இருந்தால் அவனை கேலி செய்து அவனையும் போதைப் பொருட்களுக்கு அடிமையாக்குகின்றனர். ஒரு பாடசாலை விளையாட்டுப் போட்டி நடாத்துவது தொடக்கம் கழக போட்டிகளை நடாத்துவது வரை இளைஞர்கள் தகராறுகள் அதிகரித்தே செல்கின்றது. இதனால் போட்டிகளை நடாத்தும் போது பொலீசார் உதவியுடனேயே நடாத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். போட்டிகளை நடாத்தும் குழுவினரால் இளைஞர்களை கட்டுப்படுத்த முடியாமல் தாமும் வன்முறை குழுக்களை வைத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தெருவோரத்தில் திரியும் இளைஞர்கள் பலரை பார்க்கும் போது சேட் தெறியை கழற்றி விட்டு, முடி ஒழுங்கு முறையாக வெட்டப்படாது, கறைபடிந்த பற்கள் போன்ற தோற்றத்திலேயே காணப்படுவது வேதனையளிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்நிலையை கட்டுப்படுத்த பொலீசார் உணர்வுடனும் செயற்படுவதோடு குற்றம் புரியும் இளைஞர்கள் பயப்படும் அளவிற்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்