Fri. May 3rd, 2024

செல்வச்சந்நிதி ஆலய கொத்தணி அபாயம் சுகாதார துறையினர் எச்சரிக்கை

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய சந்நிதியான் ஆச்சிரமத்தில் உணவு பரிமாறுபவர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொத்தணி உருவாகக் கூடிய அபாயம் எற்பட்டுள்ளதால் மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை குறித்த ஆச்சிரமத்தில் முகக் கவசம் அணியாமல் பலரை ஒன்றுகூட்டி சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது அன்னதான நிகழ்வு நடாத்தப்பட்டது. இதனால் குறித்த ஆச்சிரமம் மூடப்பட்டதோடு அதில் பணியாற்றிய நபர்களை தனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் உணவு பரிமாறிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதார துறையினர் கருத்துத் தெரிவிக்கையில் குறித்த ஆச்சிரமத்தில் முகக் கவசம் அணியாமல் உணவு பரிமாறிய ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் அன்றைய தினம் ஆச்சிரமத்திற்குச் சென்றவர்கள் தத்தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலோ அல்லது பொதுச் சுகாதார பரிசோதகரிடமோ தமது தகவல்களை வழங்கி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அறிவித்துள்ளனர். குறித்த ஆச்சிரமத்திற்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் பதிவு செய்து வைக்கப்படாமையினால் தாமாகவே முன்வந்து பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுள்ளனர்.
ஆச்சிரமத்தை மூடியமைக்கு பலராலும் முகநூல்களில் எதிர்மறையான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது. நேற்றுக்கூட பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் ஆலய நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளார். அந்த ஆலயத்தில் பல இளைஞர்கள் முகக் கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளை மீறி ஆடிய வீடியோ காட்சிகள் முகநூல்களில் பதிவாகியுள்ளது. இவ்வாறு பல ஆலய நிர்வாகத்தினர் உயிர்களைப் பற்றி கவலைப்படாது நிகழ்வுகளை நடாத்துவதிலேயே அக்கறை செலுத்துவது வேதனைக்குரிய விடயமாகும். இனிமேல் இவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்