Fri. May 3rd, 2024

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட பதினொரு சந்தேக நபர்களும், மூன்று உழவு இயந்திரங்களும் நேற்று (22) மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பொன்டுகள்சேனை மற்றும் புலிபாய்ந்தகல் பிரதேசத்திலுள்ள ஆற்றில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.

இதன்போது 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்;, மூன்று உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் என்பன வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விஷேட குழுவினர் மற்றும் வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர் செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்