Sat. Apr 27th, 2024

ஆசிரியர்களின் உடற்தகுதியை பரிசீலனை செய்ய வேண்டும்

வலயத்திற்கு உட்பட்ட இடமாற்றங்கள் பெறும் ஆசிரியர்கள் சிலர் தமது மருத்துவ சான்றிதழை காட்டி இடமாற்றங்களை இரத்துச் செய்வது தொடர்பாக வலயக் கல்வி பணிப்பாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கவனம் எடுக்க வேண்டும் என கல்வியியலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வடமாகாணத்தில் தாம் கடமையாற்றும் வலயங்களில் சேவைக் காலத்தை நிறைவு செய்த அல்லது தேவையின் சேவை கருதிய இடமாற்றங்கள் வழங்கப்படும் போதோ, சில ஆசிரியர்கள் பொய்யான மருத்துவ காரணங்களை காட்டி தமது இடமாற்றங்களை  இரத்துச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
ஒவ்வொரு ஆசிரியர்களும் தமது சேவைக் காலத்தை நிறைவு செய்த பின்னரோ அல்லது தேவையின் சேவை கருதிய இடமாற்றங்கள் வலயத்தினால் வழங்கப்படும் போதோ தமது வீட்டில் இருந்து சிறிது தூரத்திற்கு கூட செல்ல முடியாத ஆசிரியர்கள் எவ்வாறு உடற் தகுதியுடன் பாடசாலைகளில் கடமையாற்ற முடியும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வடமாகாண கல்வி திணைக்களம் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் பொழுது, கல்வியில் பின்தங்கி நிற்பதற்கு உடற்தகுதி இல்லாத ஆசிரியர்கள் சிலர் கடமைகளில் இருப்பதே வீழ்ச்சிக்கான காரணம் எனவும், இவர்களின் இடமாற்றங்கள் தொடர்பாக ஆசிரிய சங்கங்கள் துணைபோகக் கூடாது எனவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
மேலும், பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்கு குறித்த மருத்துவரின் சான்றிதழ் பெறுவது அவசியம் என்பது போல, ஆசிரியர்களின் உடல் நலம் தொடர்பாக குறித்த அரச மருத்துவரின் அனுமதியே பெறப்பட வேண்டும் எனவும் அறிவித்தல் வழங்க வேண்டும். ஏனெனில் சில ஆசிரியர்கள் தமது செல்வாக்கை பயன்படுத்தி சில வைத்தியர்களிடம் பொய்யான மருத்துவ சான்றிதழை பெறுகின்றனர். இதனால் சரியான காரணத்தை காட்டும் ஆசிரியர்கள் பலர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே மருத்துவ காரணங்களை குறிப்பிடும் ஆசிரியர்கள் தொடர்பாக சரியான தகவல்களை பெறுவதற்குரிய வழிவகைகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான மாணவ சமுதாயத்தை உருவாக்க ஆரோக்கியமான ஆசிரியர்கள் தேவை. இதற்கு அந்தந்த வலயக் கல்வி பணிப்பாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கவனம் எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்