Sat. Apr 27th, 2024

வைத்தியர் முறையற்ற வகையில் நடந்து கொண்டுள்ளார்- சமுர்த்தி முகாமையாளர் விசனம்

எரிபொருள் முறையாக கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யாவிட்டால் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் ஆலோசித்து வருவதாக யாழ் மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் சங்கத்தின் தலைவர்  அன்ரனி தெரிவித்துள்ளார்.

இன்று வடமராட்சி புலோலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டது. இதில் பருத்தித்துறை பிரதேச செயலரினால் அரச உத்தியோகத்தர்களுக்கான பனர் காட்சிப்படுதப்பட்டு தனியான வரிசை அமைக்கப்பட்டது.  இதில் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் காத்திருந்தனர். அப்போது சமுர்த்தி முகாமையாளர் எரிபொருள் நிரப்புவதற்கு அருகில் சென்றபோது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வருகை தந்த வைத்தியர் ஒருவர் இது வைத்தியசாலை ஊழியர்களுக்கானது எனக்கூறி அரச உத்தியோகத்தர்களை வரிசையில் நிற்பதை தடை செய்துள்ளார். அத்துடன் அவரையும் எரிபொருள் பெறுவதற்கு தடை விதித்தார். சம்பவம் தொடர்பாக யாழ் மாவட்ட சமுர்த்தி முகாமையாளரால் குறித்த வைத்தியருடன் கலந்துரையாடிய போது, அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அனைவரும் அரச உத்தியோகஸ்த்தர்களே. இதனை ஒழுங்குபடுத்த பிரதேச செயலாளர்,  பொலீஸார் போன்றோர் கடமையில் உள்ளபோதிலும் இவ்வாறு நடந்து கொண்டமை வேதனையளிக்கிறது. இதனால் தாம் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொவிட் பரவல் காலத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் நேரகாலம் பார்க்காது அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டவர்கள்.  அதேபோல் தற்போது பொருளாதார நெருக்கடி காலத்தில் இந்திய அரிசி விநியோகத்தில் ஒரு நாள் முழுவதும் ஈடுபட்டுள்ளோம், யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறும் 78446 குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கான வழமையான கொடுப்பனவுடன் மேலதிகமாக யூன் மாதத்தில் இருந்து மேலதிக கொடுப்பனவு வழங்கி வருகின்றோம். சமுர்த்தி பெறமாமல் சமுர்த்திக்காக காத்திருப்போர் பட்டியலில்   27978 குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு, இதைவிட குறைந்த வருமானம் பெறுவோர்,  முதியவர்கள் என 4059 குடும்பங்களுக்கான கொடுப்பனவு என பல்வேறுபட்ட அத்தியாவசிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். இதுவரை காலமும் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் எரிபொருள் வழங்கினால்தான் கடமைபுரிவோம் என்றோ சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்களுக்கு தனிவரிசை ஏற்படுத்தியோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்றது கிடையாது. எமது ஊழியர்களும் வேலைக்கு செல்ல வேண்டும் எனும் நோக்குடன் இன்று பிரதேச செயலாளரால் ஒழுங்குபடுத்தப்பட்ட வரிசையில் வைத்தியர் நடந்து கொண்ட முறை தமக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட செயலரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளோம். எரிபொருள் வழங்குவது தொடர்பாக முறையான அறிவுறுதல் வழங்கவில்லையாயின் தாமும் பணிப் புறகணிப்பில் ஈடுபடுவது தொடர்பாக ஆலோசனை நடாத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்