Sat. May 4th, 2024

வைத்தியர் சிவரூபன் கைது!! -விசாரணை ஆரம்பித்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு-

வைத்தியர் சிவரூபனின் கைது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று அவ்வாணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.

அவரின் கைதுக்கான காரணம், எவ்வாறான ஆதாரங்களை கொண்டு அவர் கைது செய்யப்பட்டார் என்ற விளக்கமும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஆணைக்குழு கோரவுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
பளை வைத்திய சாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் சிவரூபன் கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இரவு ஆணையிறவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட வைத்தியர் யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் தடுத்து வை;கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

குறித்த கைது தொடர்பில் வைத்தியரின் மனைவி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழு கைது செய்யப்பட் வைத்தியரை யாழ்.பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவில் சென்று பார்வையிட்டு, அவரிடம் இருந்த வாக்குமூலத்தை பெற்றுள்ளது.

இது போன்று வைத்தியரை கைது செய்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரிடமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் தகவல்கள் பெறப்பட்டிருந்தன.

இதன் பின்னர் பயங்கரவாத குற்றத்தப்பு பிரிவால் குறித்த வைத்தியரை தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வனுமதியின் பிரதியும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வைத்தியர் எந்த ஆதாரங்களை கொண்டு கைது செய்யப்பட்டார் மற்றும் எவ்வாறான குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பான முழுமையான விளக்கத்தினை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஆணைக்குழு கோரவுள்ளது என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்