Wed. May 1st, 2024

யாழ்ப்பாணத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது சாத்தியமற்றது

யாழ்ப்பாணத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ண இலங்கை விமானப்படைத் தளபதி எயார்மார்சல் சுமங்கல டயஸ் ஆகியோர் வடக்கில் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இன்று யாழிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இதன்போது, வடக்கிலுள்ள அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. எனவே கொழும்பைப் போல தொற்று அதிகம் உள்ள இடமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது.

எனவே, தற்போதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்பு செயலாளர் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாண மக்களுக்கு தான் இரண்டு கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்று ஊரடங்கு வேளையில் வீடுகளில் தனிமையாக இருங்கள், மற்றையது உண்மையை பேசுங்கள் ஏனெனில் நாங்கள் உங்களுக்காக சேவையாற்றத் தயாராக இருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், நீங்கள் உண்மையைக் கூறாது விட்டால் நாம் எந்தவித செயற்பாட்டிலும் ஈடுபட முடியாது. எனவே வடக்கில் உள்ள மக்களிடம் இந்த கோரிக்கைகளை முன்வைக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, யாழ்ப்பாணத்துக்கு நான் இன்று வருகை தந்தமைக்கான காரணம், இந்த இக்கட்டான காலகட்டத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களை நேரில் பார்த்து நன்றிகளையும் கௌரவத்தையும் புதுவருடத்துக்கான செய்தியையும் வழங்குவதற்காக வருகை தந்தேன். மாநாடு நடத்துவதற்காக வருகை தரவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரம்பல் உள்ள மாவட்டங்களாக சில கணிக்கப்பட்டுள்ளன. அவற்றில் யாழ்ப்பாணம் மாவட்டமும் ஒன்று. யாழ்ப்பாணம் அதிகளவான மக்கள் வசிக்கும் மாவட்டம். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. அதனால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சரியான நிலமை ஏற்படும் வரை ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

உலகின் வேறு நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மோசமான நிலை இல்லை. சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சில எண்ணிக்கையானோருக்கு தொற்று இருப்பதாக அறிக்கை கிடைத்தது. கொழும்பு மாவட்டத்தில்தான் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளராக ஒன்றைக் கூறிக் கொள்கின்றேன், நாம் அனைவரும் இலங்கையர்கள். இன, மதமாக வேறுபாடுகள் பார்க்கக்கூடாது.

கொரோனா வைரஸ் நோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதோ, உயிரிழப்பது பற்றியோ பாதுகாப்புச் செயலாளராக நான் பதிலளிக்க முடியாது. அது சுகாதாரத் துறையின் பொறுப்பாகும்.

நான் ஜனாதிபதிக்கு பதிலளிக்கவேண்டிய நபராகக் காணப்படுகின்றேன். தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது.

கொள்ளை நோயினால் மக்களுக்கு இழப்பு ஏற்படுமாயின் அவர்களைப் பாதுகாக்கவேண்டியது தேசிய பாதுகாப்பின் ஒரு அங்கமாகும். எனவேதான் முப்படையினரும் பொலிஸாரும் மக்களைக் காப்பாற்ற கடமையாற்றிக்கொண்டிருக்கின்றனர்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்