Sat. May 4th, 2024

மதுசாந்தின் ஹெற்றிக் கோல் – மகுடம் சூட்டியது றேஞ்சஸ்

ஆழியவளை அருணோதயா விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இன்றைய இறுதிப் போட்டியில் கொற்றவத்தை றேஞ்சஸ் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். இதன் இறுதியாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை  எதிர்த்து இளவாளை யங்ஹென்றிஸ்  அணி மோதியது. முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இருப்பினும் ஆட்டத்தின் 14 வது நிமிடத்தில்  யங்கென்றிஸ் அணியின் முன்கள வீரர் ஞானரூபன் தனது  அணிக்கான முதலாவது கோலினை பதிவு செய்தார். இதனால் ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது. இரு அணிகளின் பின்கள வீரர்களின் தடுப்பினால் கோல் போடுவதற்கு இரு அணிகளும் சிரமப்பட்டனர். இதனால் முதல் பாதியாட்டத்தில் இளவாலை யங்ஹென்றிஸ் அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இரண்டாம் பாதியாட்டத்தில் இரு அணிகளும் சமபலத்துடன் போட்டிகளை ஆரம்பித்த போதிலும் றேஞ்சஸ் அணியினரின் கட்டுப்பாட்டில் பந்து காணப்பட்டது.
52 வது நிமிடத்தில் யங்ஹென்றிஸ் அணி வீரர் முறையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த றேஞ்சஸ் அணிக்கு தண்டனை உதை கிடைத்தது. இதனை அவ்வணி வீரர் மதுசாந் கோலாக்க ஆட்டம் சமநிலைக்கு வந்தது.
இதனால் ஆட்டம் விறுவிறுப்பின் உச்சக் கட்டத்தை எட்டியது. றேஞ்சஸ் அணி வீரர்களின் ஆட்டம் மிக வேகமாக யங்ஹென்றிஸ் அணியின் கோல் பகுதியைப் ஆக்கிரமித்தனர்.
இதனால் 68வது நிமிடத்தில் மேலும் ஒரு தண்டனை உதை றேஞ்சஸ் அணிக்கு கிடைக்க மதுசாந்தினால் மீண்டும் ஒரு கோல் பதியப்பட்டது.
ஆட்டம் றேஞ்சஸ் பக்கம் சாய 78வது நிமிடத்தில் றேஞ்சஸ் அணி வீரர் மதுசாந் மிகச் சிறப்பான கோலைப் போட்டு தனது ஹற்றிக் சாதனையையும் பதிவு செய்தார். அதன் பின்னர் ஆட்டம் முடிவடைவதற்கு 5நிமிடங்கள் இருக்கையில் யங்ஹென்றிஸ் அணி வீரர் ஞானரூபன் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி 3:2 என்ற கோல் கணக்கில் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக றேஞ்சஸ் அணி வீரர் மதுசாந், தொடர் ஆட்ட நாயகனாக றேஞ்சஸ் அணி ஆர்த்திகன் சிறந்த கோல்காப்பாளராக றேஞ்சஸ் அணி வீரர் ஆர்நிகனும், மக்கள் மனம் கவர்ந்த வீரனாக றேஞ்சஸ் அணி வீரர் ரவிவர்மன், வளர்ந்து வரும் வீரராக யங்ஹென்றிஸ் அணி வீரரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்