Sun. May 12th, 2024

வவுனியாவில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி, நடந்தது என்ன

வவுனியா தெற்கு வலய மெய்வல்லுநர் போட்டியில் மைதானத்திற்கு தொலைவாக இருந்த நீர் குழியில் இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 14,15 வயதுடைய இரு மாணவர்களே உயிரிழந்துள்ளதுள்ளனர்.
வவுனியா தெற்கு வலய மெய்வல்லுநர் போட்டிகள் இன்றும் வியாழக்கிழமையும், நாளை வெள்ளிக்கிழமையும்
பம்பைமடு பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த போட்டியில் பங்கு பற்றிய இரு மாணவர்களும் மைதானத்தை விட்டு வெளிப்புறமாக உள்ள மண்மேட்டில் இருந்து தவறுதலாக அருகில் உள்ள நீர் குழியில் விழுந்துள்ளனர். இதனை அவதானித்த பிறிதொரு மாணவன் பொறுப்பாசிரியருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலீஸார், இராணுவத்தினரின் உதவியுடன் இரு மாணவர்களையும் மீட்டெடுத்து வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அறிந்து குறித்த மைதானப் பகுதிக்கு வருகை தந்த துணைவேந்தருக்கும் இறந்த மாணவர்களின் உறவினர்களால் தாக்கப்பட்டார். குறித்த மைதானத்தில் நின்ற பல்கலைக்கழக மாணவர்களால் துணைவேந்தர் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனையடுத்து, வவுனியா தெற்கு வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் இறந்த மாணவனின் உறவினர்களால் அச்சுறுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையடுத்து அவர்கள் பாதுகாப்பு கருதி சமயோசிதமாக அவ்விடத்தை விட்டு அகன்றதாகவும் தெரிய வந்துள்ளது.
மைதான நிலைமை
பலரும் குறித்த செய்தி தொடர்பாக இணையத் தளங்களில் பார்வையிட்டு மைதானத்திற்கு அருகில் இருந்த நீர்க்குழியை கவனிக்காது போட்டிகளை ஒழுங்கமைப்பு செய்யப்பட்டதாக பலரும் சிந்திக்கின்றனர். குறித்த மைதானம் பல ஏக்கர்களை உள்ளடக்கியது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட வடமாகாண கல்வித் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட எல்லே போட்டிகள் குறித்த மைதானத்தில் ஒரே நேரத்தில் இரு எல்லே போட்டிகள் நடாத்தப்பட்டது. குறித்த மைதானத்தில் இருந்து தொலைவில் சுமார் 15அடி ஆழத்திலேயே குறித்த நீர் குழி உள்ளது. இதனால் குறித்த மேட்டுப் பகுதிக்கு சென்றே அவர்கள் தவறி விழுந்திருக்க வேண்டும். இதுதொடர்பாக உடற்கல்வி ஆசிரியர் ஒருவர்  கருத்துத் தெரிவிக்கையில் போட்டிகள் நடைபெற்ற மைதானம் மாணவர்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த விளையாட்டிற்குரிய மைதானத்தை விட்டு தொலைவில் உள்ள மேட்டுப்பகுதிக்கு ஏன் சென்றார்கள் என தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்