Wed. May 8th, 2024

வடமாகாண அதிகாரிகள் வடமாகாணத்திற்கா? அல்லது யாழ்மாவட்டத்திற்கா? சேவையாற்றுகின்றனர் – பலரும் விசனம்

வடமாகாண செயலாளர், வடமாகாண கல்விப் பணிப்பாளர் போன்றோர் வடமாகாணத்திற்கு பொறுப்பா? அல்லது யாழ்மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பா? என தமக்கு சந்தேகம் நிலவுவதாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இலங்கை ரீதியில் போட்டிப் பரீட்சை வைக்கப்பட்டு அதிபர் சேவை தரம் 111 ற்கான புதிய நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது.
இதில் அவர்களுடைய சேவைக்காலம், மருத்துவ நிலை, குடும்ப நிலை எதனையும் கருத்தில் கொள்ளாமல் நியமனங்கள் வழங்கப்பட்டதோடு மாத்திரமல்லாமல், சமூக கட்டமைப்பு தெரியாமலும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாண அதிபர் சேவைக்கே இந்த நியமனங்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டது.
புள்ளிகளை கருத்தில் கொண்டு முறைகேடு
 
அனைவரும் அதிபர் சேவை பரீட்சைக்கே தோற்றினர். இதில் புள்ளிகள் அடிப்படையில் யாழ்மாவட்டத்தில் அதிபர், பிரதி அதிபர் வெற்றிடங்கள் எத்தனை உள்ளன. இவை நிரப்பப்பட்ட பின்னரே யாழ்மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு அதிபர்,  பிரதி அதிபர் நியமனங்கள் வழங்கப்படும் என வடமாகாண கல்வித் திணைக்களத்தால் வெளியிட்டிருக்க வேண்டும்
2018 ஆண்டு நடைபெற்ற அதிபர் தரம் 111 சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரிட்சையில் முதல் கட்டம் 2019 ஆண்டிலும்,  இரண்டாம் கட்ட நியமனம் 2022 இலும், மூன்றாம் கட்ட நியமனம் 2023 இலும் நடைபெற்றது. வடமாகாணத்தில் 374 வரையானவர்கள்  அதிபர் தரம் 111அதிபர்களாக கடமையேற்றனர். இவர்களுக்கான முன்சேவை பயிற்சி கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, நெல்லியடி மத்திய கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, வவுனியா ஆகிய 4 நிலையங்களில் இடங்களில் 16.11.2023 ல் இருந்து ஆரம்பமாகி 15.12.2023 வரை நடைபெற்றது. இவ் அதிபர்களை வடமாகாணத்தில் நிலைப்படுத்தல் நியமனக்கடிதங்கள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் 15.12.2023 மாலை 4 மணிக்கு இணைப்பு நிலையங்களில் வைத்து கைகளில் வழங்கப்படது. அதுவும் வைபவரீதியாக நடைபெறாமல்  மாகாண கல்வித் திணைக்களத்தில் பணிபுரிவோரால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது. அதில் உடன் செயற்படும் படி என்று நியமனத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. சனி ஞாயிறு தினங்கள் எல்லோராலும் கடமை ஏற்க முடியவில்லை. தங்களது முன்னய பாடசாலைகளில் கையொப்பம் இடுவதற்கு சென்றவேளை சில அதிபர்கள் சில வலயக் கல்வி பணிப்பாளர்கள் அனுமதி வழங்கி இருந்தனர். ஆனால் சிலர் அனுமதி வழங்கவில்லை.
அத்துடன் முதலில் அதிக புள்ளி எடுத்தவர்களுக்கு வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் அதிபர் பதவிகள் வழங்கப்பட வேண்டும்.  அதன் பின்னரே பதில் அதிபர், பிரதி அதிபர் பதவிகள் வழங்கப்பட வேண்டும்.  அதைவிடுத்து
பரீட்சையில் புள்ளி அதிகம் எடுத்தவர்களுக்கு யாழ் மாவட்டத்தில் அதிபர்களாகவும், அடுத்த நிலையில் புள்ளிகளை பெற்றவர்கள் யாழ் மாவட்டத்தில் பதில் பிரதி அதிபர், பிரதி அதிபர்களாகவும். அடுத்த நிலையில் புள்ளிகளை பெற்றவர்கள் யாழ்ப்பாணத்தில் உதவி அதிபர்களாகவும் நியமனம் வழங்கப்பட்டு ஏனையோர் எடுத்த புள்ளிகளுக்கு  ஏற்ப யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களின் நியமனத்தின்படி
யாழ்மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் குறைந்த புள்ளி எடுத்தவர்கள் அதிபர்களாவும்,  பரீட்சையில் கூடிய புள்ளிகள் எடுத்தவர்கள் யாழ்மாவட்டத்தில் பிரதி அதிபர்களாகவும் வழங்கப்பட்டுள்ளது. இதில் எது பதவி கூடிய நியமனம் என்பது புலனாகவில்லை.
உதாரணமாக வடமாகாணத்திற்கு இலங்கை நிர்வாக சேவையில் சித்தியடைந்தால் முதலில் யாழ்மாவட்டத்தில் உள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,  உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் போன்றோரின் வெற்றிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் தான் ஏனைய மாவட்டங்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் நிமயங்கள் வழங்கப்படுமோ? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன் பின்தங்கிய பாடசாலைகளுக்கும்,  மாணவர்களும் புள்ளி அதிகம் பெற்று நிர்வாக திறமைனவர்கள் தானே தேவை? அதைவிடுத்து குறைந்த புள்ளி எடுத்து , நிர்வாக திறமை குறைந்தவர்களை பின்தங்கிய பாடசாலைகளுக்கு நியமித்தால் எவ்வாறு கல்வியில் உயர்ச்சி பெற முடியும்.
குறித்த நியமனத்தில் இருந்து வடமாகாண அதிகாரிகள் வடமாகாண பிரதேசத்திற்கு செயற்படாமல் யாழ்மாவட்டத்திற்கு மட்டும் சேவையாற்றி தமது அதிகார துஸ்பிரயோகத்தை மேற்கொள்கின்றனர்.
சமூக கட்டமைப்பை மீறிய செயற்பாடு
அதிபர் அருட்சகோதரிகளுக்கு மாத்திரம் கன்னியர்மடம் பாடசாலைகள் வழங்கப்பட்ட போதிலும், இந்து மத குருவிற்கு றோமன் கத்தோலிக்க பாடசாலையும், கிறிஸ்தவ அருட்தந்தைக்கு முஸ்லீம்  பாடசாலையும் வழங்கப்பட்டது. மாற்று நடவடிக்கைகள் காணப்பட்ட போதிலும் ஏன் கருத்தில் கொள்ளவில்லை.
சேவைக்காலம் கருத்தில் கொள்ளாமை
அதிபர் சேவை என்பது முதலில் அவர் ஆசிரிய சேவையில் இருந்தே அதிபர் பரீட்சைக்குத் தோற்ற முடியும், ஆனால் அதிகாரிகளால் ஆசிரிய சேவை வேறு, அதிபர் சேவை வேறு என குறிப்பிடுகின்றனர். குறித்த அதிபர் சேவைக்கு உள்வாங்கப்பட்டவர்களில் பலர் ஆசிரிய சேவையில் சுமார் 8 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியுள்ளனர். இவ்வாறு இருக்கும் போது அதிபர் நியமனம் புதிய சேவை மீளவும் வெளிமாவட்டங்களில் தமது சேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என குறிப்பிடுவது எந்த வகையில் நியாயம்.
மருத்துவ சான்றிதழ், குடும்ப நிலையை கருத்தில் கொள்ளாமை
ஒரு ஆசிரியை முழங்கால் சில்லு தேய்வடைந்த நிலையிலும் சுமார் 100 கிலோ மீற்ரருக்கு அப்பால் அவரின் நியமனம் வழங்கப்பட்டது. அத்துடன் விசேட தேவையுடைய பிள்ளை இருந்த போதிலும், குறித்த ஆசிரியருக்கு கடல் கடந்த நியமனம் வழங்கப்பட்டது.
இவ்வாறு பல முறைகேடாகவே அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிபர்களுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கும் முன்னர்,  அவர்களின் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு, அதனை அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் தான் அவர்களுக்கான முன் சேவை பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் முன்சேவை பயிற்சி வழங்கப்பட்ட பின்னர்,  பொருத்தமற்ற பாடசாலையை வழங்கிவிட்டு முன்னைய பாடசாலைகளில் கையொப்பம் இடமுடியாது என அறிவிப்பதும்,  கட்டாயம் தமது கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என்பதும் எந்த வகையில் பொருத்தம். அத்துடன் இலங்கை அதிபர் சேவை நியமனம் வடமாகாணத்தை தவிர ஏனைய மாகாணங்களுக்கு இன்னமும் வழங்கப்படவில்லை. அவர்கள் தமது முன்னைய பாடசாலைகளிலேயே தமது கடமைகளை பொறுப்பேற்று விடுமுறையை தற்போது பெற்றுள்ளனர்.
எனவே இது தொடர்பாக இலங்கை கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அதிக அக்கறை செலுத்தி அதிபர் நியமனங்களை மீள் பரிசீலணை  செய்யுமாறும் பாதிக்கப்பட்ட அதிபர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்