Fri. May 10th, 2024

கல்வி அறிவும், தலைமைத்துவ பண்பும், திறனும் உள்ள தலைவர்களையே மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் -பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்

கல்வி அறிவும், தலைமைத்துவ பண்பும், திறனும் உள்ள தலைவர்களையே மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என மாணவர்களுக்கான கருத்தரங்கில்
 தலைமைத்துவ கருத்தரங்கில் பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில்  மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவ பண்பை விருத்தி செய்து கொள்ளும் செயலமர்வில் வளவாளராக கலந்து கொண்ட பொதுச சுகாதார பரிசோதரே  இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் தமது தலைவர்கள் கல்வி அறிவும், தலைமைத்துவ பண்பும், திறனும் வாய்ந்தவர்களாக இருப்பதையே அதிகம் விரும்புகிறார்கள் அவ்வாறான தலைவர்களை பின்பற்றியே மக்கள் பின் செல்ல ஆசைப்படுகிறார்கள்.வன்முறை அற்ற, நேர்வயமான சிந்தனையுடைய சிறந்த வழிகாட்டுதல் கொண்ட தலைமைத்துவமே எல்லோருக்கும் தேவைப்படுகிறது
எனவே மாணவர்கள் தமது பாடசாலை காலத்திலே தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என மந்துவில் பொது சுகாதார பரிசோதகர் ஆ. ஜென்சன் றொனால்ட் குறிப்பிட்டார்.
மேலும், தலைமைத்துவ பண்பை விருத்து செய்து கொள்வதற்கு மாணவர்களிடம் நேர்மை,  வெளிப்படைத்தன்மை, சிறந்த தொடர்பாடல் திறன்,  தூரநோக்குச் சிந்தனை, துணிவு,  மற்றவர்களை புரிந்து கொள்ளும் ஆற்றல், சிறந்த திட்டமிடல், வழிகாட்டுதல்,  மற்றவர்கள் உடைய கருத்துகளுக்கு மதிப்பளித்தல், அறிவார்ந்த சிந்தனை, குழுவாக வேலை செய்யும் திறன், குழுவினரை அரவணைத்து வழிநடத்தும் பண்பு, மற்றும் சிறந்த பேச்சாற்றல் போன்ற பல பண்புகளை பாடசாலை காலத்திலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 எனவே இதற்கான சந்தர்ப்பங்களான பாடசாலை காலங்களில் வகுப்பறை தலைவர்களாக இருத்தல், மன்றங்களில் இணைந்து செயல்படுதல், முதலுதவி படைப்பிரிவில் இணைந்து செயலாற்றுதல், சுற்றாடல் மன்றங்களை நடத்துதல், காலை பிரார்த்தனையிலே தலைமை தாங்கி கருத்துக்களை தெரிவித்தல், விளையாட்டு விழாக்களில் இணைந்து செயல்படுதல், சிரமதானங்களை ஒழுங்கமைத்து செயற்படுத்துதல், இசை குழுக்களில் அங்கத்தவராக இருத்தல் மற்றும் சமூகத்துடன் இணைந்து பாடசாலை மாணவர்கள் செயலாற்றுதல்  போன்றவற்றை பாடசாலை காலங்களிலே மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு தமது தலைமைத்துவ பண்புகளை விருத்தி செய்து கொள்ளுதல் வேண்டும்.
 தலைமைத்துவங்களின் வகைகளாக சர்வதிகார தலைமைத்துவம், ஜனநாயக தலைமைத்துவம், முன்மாதிரிகைத் தலைமைத்துவம், தலையிடாத் தலைமைத்துவம் போன்றவை காணப்படினும்  சூழ்நிலையை பொறுத்து ஒவ்வொரு வகையான தலைமைத்துவத்திலும் காணப்படுகின்ற அனுகூலமான இயல்புகளை கலந்து ஒரு சிறந்த தலைவர் பயன்படுத்த வேண்டியவராக இருப்பார்.  கல்வியுடன் சேர்த்து ஒழுக்கம் மிக்க தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் எதிர்காலத்தின் சிறந்த சிற்பிகளாகவும் ,நாட்டின் தலைவர்களாகவும் மாறவேண்டும் என்பதே எமது இலக்கு என்றார்.
இச்செயலமர்விலே வழிகாட்டல் மற்றும் தொடர்பாடல் திறன் போன்ற பண்புகள் சம்பந்தமான செயற்பாட்டு ஆற்றுகைகளும் மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்