Tue. May 14th, 2024

நாளை முதல் 3நாட்களுக்கு விசேட நுளம்பு கட்டுப்பாடு

2023 ஜனவரி 03 முதல் 05 வரை யாழ் மாவட்டத்தில் விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு செயற்திட்டம் செயறற்படவுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் அதிக மரணங்களும்  பதிவாகின்றன. யாழ் மாவட்டத்தில்  கடந்த வருடத்தில்; இதுவரையான காலப்பகுதியில்; 3421 நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் ஒன்பது மரணங்களும் பதிவாகியுள்ளன. மேலும் 2022ம் ஆண்டின் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலேயே, பருவப்பெயர்ச்சி மழையின் பின்  யாழ் மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ள  டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக   அதிகரித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் 231 டெங்கு நோயாளர்களும், நவம்பர் மாதத்தில் 306 டெங்கு நோயாளர்களும் மற்றும் டிசம்பர் மாதத்தில் 633 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
பருவப்பெயர்ச்சி மழையுடன் ஏற்பட்டுள்ள இவ்  டெங்கு பெருந்தொற்றினைத் தடுப்பதற்கு வாராந்தம்  உறுதி செய்யப்படும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். எனவே அனைத்து பிரதேசங்களிலும் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை டெங்கு பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாகக் கருத்தில் கொண்டு எதுவித காலதாமதமும் இன்றி சமூக பங்களிப்புடன் நுளம்புகள் உருவாகும் மூலங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
எனவே இதனை கருத்திற்கொண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி முதல் 5ம் திகதி வரை தொடர்ச்சியாக முன்று நாட்கள் யாழ் மாவட்டத்தில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு செயற்திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நாட்களில்  சுகாதார உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் படையினர், பொலிஸ், கிராம உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள்  மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுக்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுவாரியாக  உள்ள அரச தனியார் நிறுவனங்கள், மத ஸ்தலங்கள், பாடசாலைகள் , உயர் கல்வி நிறுவனங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் , கட்டடநிர்மாணங்கள் நடைபெறும் இடங்கள், மற்றும்; மீன் பிடி துறைமுகங்கள்  என்பனவற்றிற்கு   நுளம்புகள்  பெருகக்கூடிய  ஆபத்துள்ள இடங்களை அடையாளம் காணும் நோக்கத்துடன்  பரிசோதிப்பதற்காக வருகை தருவர். எனவே உங்கள் வீட்டின் உட்பகுதிகளிலும், வெளிச் சுற்றாடலிலும் டெங்கு நுளம்புகள்  பெருகும் இடங்கள் உள்ளனவா என்பதனை  கிரமமாக பரிசோதனை செய்வதுடன் அவற்றை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவும.; பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் அரச தனியார் நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள் தமது நிறுவனங்களில் கூட்டு முயற்சியாக  சிரமதான பணிகளை முன்னெடுக்கவும்.
மேலும் கைவிடப்பட்ட காணிகள், வீடுகள் என்பனவற்றின் உரிமையாளர்கள் அவற்றை துப்பரவாக பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன், அவ்வாறான இடங்களில்  டெங்கு நுளம்புகள்  பெருகக்கூடிய ஆபத்து நிலைகள், கள தரிசிப்புக்கு  வருகை தரும் உத்தியோகத்தர்களால் அடையாளம் காணப்படுமாயின் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
டெங்கு நோயிலிருந்தும் அதனால் ஏற்படக்கூடிய மரணங்களில் இருந்தும் எம்மையும் எமது சமுகத்தையும்  பாதுகாக்க ஒன்றிணைவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்