படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு ஆளுநரின் அவசர அறிவித்தல்
வடக்கில் படையினராலும் போலீஸாராலும் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்றும், மீள் உரிமைகோரல் விண்ணப்பப்படிவங்கள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படுவதாகவும் ஆளுநர் செயலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்தகட்டமாக ஏனைய மாவட்டங்களிலும் படையினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரித்தானவர்கள் அறியத்தர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது காணியின் உரித்தானவர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களாக இருப்பினும் அவர்களும் தமது காணிகளை அடையாளப்படுத்துமாறும் ஆளுநரின் செயலகம் அறிவித்துள்ளது .இதற்கென்று தயாரிக்கப்பட்ட விசேட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிமைகோரலுக்கான தகுந்த ஆதாரங்கள் மற்றும் விளக்கத்துடன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பப்படிவத்தினை ஆளுநர் செயலகம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் ஆகிய இடங்களிலும் மற்றும் வடமாகாண சபையின் http://np.gov.lk/ என்ற இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் காணி உறுதியின் பிரதியையும் இணைத்து எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் ‘காணி கோரல் ‘ வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது