Sun. Jun 16th, 2024

பாடசாலைச் சமூகத்தின் சுகாதார மேம்பாடு என்பது மாணவர்களின் கல்வி மற்றும் ஆளுமையின் அடித்தளமே – மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்.

பாடசாலைச் சமூகத்தில் சுகாதார மேம்பாட்டு திட்டங்களை கட்டிவளர்ப்பது மாணவர்களின் வினைத்திறனான கல்வி மற்றும் ஆளுமை வளர்ச்சியின் அடித்தளமாக அமையும். எனவே சுகாதார மேம்பாட்டு கூறுகளையுடையதாக பாடசாலைச் சூழலை அமைத்து சுகாதார மேம்பாட்டு பாடசாலைகளாக ஒவ்வொரு பாடசாலைகளையும் மாற்றியமைக்கும் பொறுப்பை பாடசாலைச்சமூகம் முன்னெடுக் முன்வரவேண்டும் பூநகரி பிரதேச மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனாலட் சுட்டிக் காட்டியுள்ளார்.
அண்மையில் பூநகரி கோட்டக்கல்விப் பணிப்பாளர் நா.கணேஸ்வரநாதன் தலைமையில் பூநகரி மத்திய கல்லூரில் இடம்பெற்ற அதிபர்களுக்கான ஒன்றுகூடலில் பாடசாலைச் சுகாதார மேம்பாட்டு வழிகாட்டல்கள் குறித்து கருத்துரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுகாதார மேம்பாட்டு பாடசாலைகள் மாணவர்களுக்கு ஆரோக்கியத்தையும் கவ்விக்கான அடித்தளத்தையும் ஆளுமைப் பண்புகளையும் வளர்க்க உதவுகின்றன. பாடசாலை சுகாதார மேம்பாட்டுக் குழுவினூடாக பல்வேறு வளவாளர்களின் உள்ளீடுகள் கிடைப்பதோடு பாடசாலைச் சுகாதாரக் கழகங்களூடாக மாணவர்களது செயற்பாட்டுடனான ஆளுமையும் தலைமைத்துவப் பண்புகளும் பல்வேறு திறன்களும் கட்டியெழுப்பப்படுகின்றன. வளரிளம் பருவ சுகநலம், இனப்பெருக்க சுகாதாரம், சுற்றுச்சூழற் சுகாதாரம் பற்றிய அறிவும் அனுபவங்களும் பிள்ளைகளுக்குக் கிடைக்கின்றன.
பாடசாலைச் சுகாதார மேம்பாடடில் தரமான பாடசாலை மருத்துவப் பரிசோதனை, தடுப்பு மருந்தேற்றல், பிள்ளை சுகாதார விருத்திப் பதிவேட்டை பயன்படுத்தல், சுகநலக் கல்வி வழங்கல் என்பனவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
படசாலை சுகாதார மேம்பாட்டு அறையானது பாடசாலை சுகாதார நடவடிக்கைகள் பாடசாலைச் செயற்பாட்டை பாதிக்காது வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கும், பிள்ளைகள் தங்கள் போசாக்கு நிலை, பார்வை வலு என்பவற்றை தாங்களே சுயமாக எந்தவேளையிலும் அறிந்து கொள்ளவும் அவசர சுகாதார நிலைமைகளை பாதுகாப்பாகக் கையாளவும் உதவுகின்றது.
பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைக் கொள்கைகளை சரியாகக் கடைப்பிடிக்கும்போது மாணவர்கள் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கைக்கொண்டு தொற்றும் மற்றும் தொற்றா நோய்களிலிருந்து விடுபடவும் மாணவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஏற்ற நடத்தை மாற்றத்தை உண்டுபண்ணவும் உதவுகிறது.
பாடசாலையின் சமையல் இடங்கள், களஞ்சியம் என்பன உணவை மாசுபடுதலிலிருந்து பாதுகாக்கத்தக்க வகையில் அமைக்கப்படுவதோடு கழிவுகளை வகைப்படுத்திச் சேகரித்தல் மற்றும் பாதுகாப்பான இறுதிக் கழிவகற்றல் என்பனவும் மிகவும் முக்கியமானவை.
சுகாதார மேம்பாட்டு செயற்றிட்டங்களை பாடசாலைச் சமூகம் தமது உரிமையாகவும் கடமையாகவும் எடுத்துச் செயற்படுத்தும் போது ஏனைய சமூகங்களும் தமது ஒத்துழைப்புகளை விரும்பி வழங்க முன்வருவதால் சுகாதார மேம்பாட்டு பாடசாலைகளின் முழு நன்மைகளையும் மாணவர்களும் அவர்களது சமூகமும் முழுமையாகப் பெற்றுக்கொள்ள வழிபிறக்கும் என்றார்.
இந்தநிகழ்வில் கிளிநொச்சி தெற்கு வலய பாடசாலை அதிபர்கள் மற்றும் பிதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்