Fri. May 17th, 2024

24 மற்றும் 25 ஆம் திகதிகளில் திறக்கப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள்

கோரோனோ தொற்றை குறைப்பதற்காக நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் , 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது . எனினும் இந்த சந்தர்ப்பங்களில் சில்லறை விற்பனையில் ஈடுபட முடியாது என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, பருப்பு , சீனி மற்றும் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே நாட்டில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலுள்ள போதிலும் கப்பல் போக்குவரத்து இறக்குமதி செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் சதொச களஞ்சியசாலைகளுக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும். இதன் போது சதொச விற்பனை நிலையங்களில் சில்லறை விற்பனைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் பொருட் கொள்வனவிற்கான நடமாடும் சேவையை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நடமாடும் சேவையில் ஈடுபடுவதற்கு யாருக்கு அனுமதி வழங்குவது என்பது பிரதேச செயலாளர்களினால் தீர்மானிக்கப்படும். அத்தோடு 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும் என்றார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிக்கையில் ,
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலுள்ள காலப்பகுதியில் மீன் பிடியுடன் தொடர்புடைய செயற்பாடுகள் கடற்றொழில் அமைச்சினால் தடையின்றி முன்னெடுக்கப்படும். அத்தோடு மக்களின் நலன் கருதி ஒவ்வொரு கிராமத்திலும் ஏதேனுமொரு விற்பனை நிலையத்தை மாத்திரம் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும். மேலும் நடமாடும் சேவையூடாகவும் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படும். மருந்தகங்கள் திறந்திருப்பதோடு , பேக்கரி உற்பத்தியாளர்கள் அவர்களின் உற்பத்திகளை நடமாடும் சேவையூடாக மக்களுக்கு வழங்க முடியும் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்