Wed. May 15th, 2024

விளையாட்டின் மூலம் மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம் பேணப்படுகின்றது.  உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் 

விளையாட்டின் மூலம் மாணவர்களின் ஒழுக்கம் பேணப்படுகின்றது என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார். கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலத்தில் தேசிய மட்டபோட்டிக்கு செல்லும் கபடி அணிக்கு சீருடை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கின்ற இயலுமை எது இயலாமை எது என இனங்கண்டு ஊக்கப்படுத்துபவன் ஆசிரியன். அதிலே மாணவர்கள் தமது ஆற்றலுடன் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தும் போது சாதனை புரிகின்றனர்.
விளையாட்டில் ஈடுபடுகின்ற ஒவ்வொருவரும் ஒழுக்க விழுமியத்தை பின்பற்ற வேண்டும். இது விளையாட்டின் முலம் பேணப்படுகின்றது. விளையாட்டில் விதிகளையும் ஒழுக்கத்தையும் மீறுபவர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள். அதனால் பாடசாலைக்கே அவமானம் என்பதை உணர்ந்து மாணவர்கள் தம்மை ஒழுக்க சீலர்களாக மாற்றுகின்றனர். இருந்த போதும் ஒரு சிலர் தலைமுடியை சீர்செய்வதில்லை, முகச்சவரம் செய்வதில்லை, சரியான ஆடைகளை பயன்படுத்துவதில்லை, உடலில் பச்சை குத்துதல் போன்ற பிறழ்வான செயல்பாடுகளில் ஈடுபட்டு மாகாண போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டதனால் ஒழுக்கம் என்பது விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு இறுக்கமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஒழுக்கம் உயர்வாக காணப்படுகின்றது.
இதில் பாடசாலைகள் அனைத்தும் கவனமெடுக்க வேண்டும் கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயம் தேசியம் வரை பேசப்பட்டு அடையாளப்படுத்தியது கபடி அணியே என்பதை யாரும் மறுத்து விடமுடியாது. விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் இலக்கு நோக்கிய பயணம் தெளிவாக இருக்கும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற சிந்தனை எண்ணம் ஊற்றாக காணப்படும்.
இதனால்  வேறு தீய சிந்தனைகள் தீய பழக்க வழக்கம் தீயவர்களுடன் சேர்தல் என்பன தவிர்க்கப்படுகின்றது. சிங்கம் கூட தான் வேட்டையாடாத எந்த உணவையும் உண்ணாது. கடும் பசியில் கூட தனது ஒழுக்கத்தை கைவிடாது. எனவே மாணவர்களாகிய நீங்களும் ஒழுக்கத்தை ஒரு போதும் கைவிடக்கூடாது ஒழுக்கம் இல்லாத உயிர் இருந்தும் பயனில்லை யாரும் மதிக்கமாட்டார்கள். நீங்கள் விளையாட்டில் சாதனையாளர்களாக இருந்தாலும் ஒழுக்கம் இல்லாவிட்டால் கெளரவம் கிடையாது. எனவே ஒழுக்கத்தை பேணி உயர்ந்தவர்களாக உருவாக வேண்டும் என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்