Sat. May 18th, 2024

தேவரையாளி இந்துக் கல்லூரி மாணவனின் நெகிழ்வான செயல்

வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட யா/தேவரையாளி இந்துக் கல்லூரி மாணவனின் செயல் நெகிழ வைத்துள்ளது.

இன்று காலை திக்கம் வீதியில் பனை மர ஓலை ஒன்று மின்சார கம்பியுடன் தொடுகையுற்றதால் மின்சாரம் பாய்ந்து பனை மர ஓலை எரிந்துள்ளது. அதனை அவதானித்த தேவரையாளி இந்துக் கல்லூரியில் தரம் 8இல் கல்வி கற்கும் மாணவன் குடி நீர் பெறுவதற்காக அப்பகுதியால் வந்துள்ளார். பனை ஓலை மின்சாரம் தாக்கியதில் ஓலை எரிவதை அவதானித்த அந்தச் சிறுவன் சற்று தூரம் தள்ளி நின்று அவதானித்தபடி அப்பகுதியூடாக  செல்பவர்களிடம் சம்பவம் தொடர்பாக கூறி பாதுப்பாக செல்லுமாறும் அறிவிக்கத்துக் கொண்டிருந்தார். நியூஸ் தமிழ் செய்தியாளராகிய நானும் அவ்வீதியூடாக சென்ற போது எனக்கும் அறிவித்தார்.
அந்த சிறுவனின் செயற்பாடு என்னை மனம் நெகிழ வைத்தது.  எனது பங்கிற்கு பருத்தித்துறை மின்சார சபைக்கு அறிவித்தேன். அவர்கள் மின்சாரம் திருத்தும் இலக்கத்திற்கு அறிவிக்கச் சொன்னார்கள். நானும் அறிவித்தேன்.  ஆனால் தொலைபேசியில் என்னுடன் உரையாடிய அதிகாரி அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதா எனக் கேட்டார். இல்லை என்றேன்,  தற்போது ஓலை எரிகிறதா எனக் கேட்டார். அதற்கும் இல்லை என்றேன். அப்ப பிறகென்ன என்றார். அதற்கு நான் மின்சாரம் தாக்கி பனை எரிந்தோ அல்லது யாருக்காவது விபத்து ஏற்பட்ட பின்னர் தான் வருவீர்களா? எனக் கேட்டேன்.  அதன் பின்னர் விபரம் கேட்டு 10 நிமிடத்திற்குள் மின்சார சபையினர் வந்து பார்வையிட்டனர்.
நான் மின்சார சபைக்கு அறிவித்த பின்னரும் தண்ணீர் அள்ளிக் கொண்டு வந்த சிறுவன் மரத்தையே அண்ணாந்து பார்த்தபடி நின்றான். அதன் பின்னர் மின்சார சபையினர் வருவார்கள் நீ இவ்விடத்தை விட்டு போகலாம் என்றேன்.  மன நிறைவுடன் அவனும் அவ்விடத்திலிருந்து விலகினான். இவ்வாறு பொதுநலம் கொண்ட மாணவர்களை உருவாக்கும் பெற்றோர்கள், கல்லூரி அதிபர் ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.  வெறுமனவே கல்வியை மட்டும் பாடசாலையில் புகட்டாது, தலைமைத்துவம், பிரச்சனையை எதிர்கொள்ளும் தன்மை போன்றவற்றை வளர்க்க வேண்டும்.  தற்போது பல பாடசாலைகள் மாணவர்களின் பெறுபேறுகளில் மட்டுமே அக்கறை கொள்வது வேதனைக்குரிய விடயம். இதனாலேயே கல்வியில் நல்ல பெறுபேறுகளை எடுத்த மாணவர்கள் கூட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாது தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள்.
கல்விக்கு அப்பால் மாணவர்களின் திறன்களை வளர்த்து விடுங்கள். அதுவே பாடசாலைகளின் நோக்கமாகும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்