Fri. May 17th, 2024

சட்டத்தை மீறத் தூண்டும் கரவெட்டி பிரதேச சபை – மக்கள் குற்றச்சாட்டு

கரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள மக்கள் தமது குப்பைகளை முறையாக அகற்ற முடியாதுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

கரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மண்டான் பகுதியில் ஏக்கர் பகுதியில் குப்பை போடுவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அப்பகுதியில் குப்பை போடுவதற்கு பிரதேச சபையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கையில், இப்பகுதிக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கரவெட்டி பிரதேச சபையால் நியமிக்கப்பட்டுள்ளனர். பொலித்தீன் போடுவதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்  கொண்டு வரும் குப்பைகளை கடமையில் ஈடுபடும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பார்வையிட்டு தரப்படுத்தி குப்பைகளை போடுவதற்கு அனுமதிக்கலாம். ஆனால் பிரதேச சபையால் மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் தாம் கொண்டு வரும் குப்பைகளை வீதிகளில் வீசி விடுவதுடன் சிலர் மண்டான் ஆற்று நீரிலும் போட்டுவிட்டுச் செல்கின்றனர். இதனால் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் பாதிப்படைகின்றனர். இது தொடர்பாக பல தடவைகள் பலரால் பிரதேச சபை தவிசாளர் மற்றும் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு வந்த போதிலும் அவர் கவனம் செலுத்தாமையிட்டு அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். சில வீட்டு உரிமையாளர்கள் தமது குப்பைகளை வெளியேற்றுவதற்கு கட்டணம் செலுத்துவதாக கூறிய போதிலும் அதனையும் ஏற்க மறுக்கின்றனர். பொதுச் சுகாதார பரிசோதகர்களால் டெங்கு கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடும் போது, குப்பைகளை முறையாக அகற்றாமையால் தாம் தண்டப் பணம் செலுத்த வேண்டிய நிலை உருவாவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால் சட்டத்தை கடைபிடிக்கும் மக்களை மீறச் செய்யும் குற்றச் செயலில் பிரதேச சபை ஈடுபடவைப்பதாக குற்றம் சுமத்துகின்றனர். இது தொடர்பாக கரவெட்டி பிரதேச செயலகம் மற்றும் நெல்லியடி பொலீஸார் கவனமெடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்