சாரதிகளின் முரண்பாடு கர்ப்பவதி ஒருவர் இடைநடுவில் பேருந்தை விட்டு இறங்கி வேறு பேருந்தில் பயணம்
இரு தனியார் பேரூந்து சாரதிகளுக்கிடையிலான முரண்பாட்டினால் கர்ப்பவதி ஒருவர் இடைநடுவில் பேருந்தை விட்டு இறங்கி வேறு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை நீர்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை தனியார் பேருந்து மற்றும் அச்சுவேலி தனியார் பேருந்து சாரதிகள் இருவருக்குமே குறித்த மோதல் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை தனியார் பேருந்து சாரதி ஒருவரை அச்சுவேலி பேருந்து சாரதி மற்றும் நடத்துனரால் தாக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணை நாளை திங்கட்கிழமை முற்பகல் 10 நடைபெறும், இதற்கு இரு தரப்பினர்களும் கோப்பாய் பொலீஸ் நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என பொலீஸார் அறிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் பருத்தித்துறையிலிருந்து 2.20 மணிக்கு புறப்பட்ட பேருந்து நீர்வேலி பகுதியில் அச்சுவேலி தனியார் பேருந்தை முந்திச் சென்று பயணிகளை ஏற்ற முற்பட்ட போது, குறித்த பருத்தித்துறை தனியார் பேருந்தை அச்சுவேலி தனியார் பேருந்தில் வந்தவர்களால் வழிமறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் குழப்பம் அடைந்து தமது பாதுகாப்பு காரணமாக பேருந்தை விட்டு இறங்கிய கர்பவதி பயணி ஒருவர் பிறிதொரு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பேருந்து சாரதி, தன்னை அச்சுவேலி தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்தனர் தாக்கியதாக கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்
பருத்தித்துறை தனியார் பேருந்து சங்கத்தினருக்கும், அச்சுவேலி தனியார் பேருந்து சங்கத்தினருக்கும் பேருந்துகள் புறப்படும் நேரங்கள் மற்றும் தாமத வருகைகள் தொடர்பான முரண்பாடுகள் உள்ளன. இதனை தீர்க்க வேண்டிய வடமாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையினரின் அசமந்த போக்கே இவ்வாறான பிரச்சனைகளுக்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். தமக்கு பதிவுகள் தொடர்பாக கட்டணங்களை மாத்திரம் அறவிடும் வடமாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையினர் தமது பிரச்சனைகள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.