Fri. May 17th, 2024

வேரை இழந்த மரமும் வரலாற்றை இழந்த இனமும் வாழ்ந்ததாக சரித்திரமில்லை         உடற்கல்வி  டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் 

வேரை இழந்த மரமும் வரலாற்றை இழந்த இனமும் வாழ்ந்ததாக சரித்திரமில்லை என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.

அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் பரிசில் தின நிகழ்வும் நிறுவுனர் தினமும் அதிபர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற போது நிறுவுனர்தின உரையாற்றிய சங்கத்தின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தனதுரையில்
இளம் தலைமுறையினருக்கு வரலாற்றை சரியான முறையில் விதைக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் வரலாற்று திரிவுகள் தமக்கு  ஏற்ற வகையில் செய்யப்படுகின்றது. அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரியின் வரலாறும் முழுமையடையவில்லை. 1912ம் ஆண்டு பத்தாம் மாதம் 20ஆம் திகதி விஜயதசமியன்று ஆரம்பிக்கப்பட்டது. மிசனரிமார்கள் கல்விக்கூடங்களை நிறுவி கல்வியை கொடுத்தார்கள். அந்த நேரத்தில் அராலியில் சைவமும் தமிழும் தழைத்தோங்க வேண்டும் என்ற நோக்கிலும், பெண்கள் கல்விகற்க வேண்டும் என்ற நோக்கிலும் உடையார் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இது கனிஷ்ர பாடசாலையாகவும் வித்தியாலயமாகவும், மகா வித்தியாலமாகவும் இன்று கல்லூரியாக பரிணமித்துள்ளது. கல்வியுடன் ஒழுக்கத்தையும் அறத்தையும் போதித்து வந்து பல துறைசார்ந்தவர்களையும் உருவாக்கி இன்றும் தலை நிமிர்த்தி நிற்கிறது. இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் அக்கறை காட்டுவதில்லை. புள்ளிகளை அதிகளவு பெற்றால் போதுமென்று  நினைக்கிறார்கள். அதிக புள்ளிகள் மனித நேயத்தை உருவாக்காது. மகாபாரதத்தில் குருஷேஷ்திரத்தில் அதிகாலை  பயிற்சியில் ஈடுபடும் போது குரு துரோணர் அர்ஜுனனை பார்த்து பறந்து கொண்டிருக்கும் பறவைக்கு அம்பினை விடும்படி சொல்ல அர்ஜுனன் அம்பை எய்கிறான். பறவை கீழே விழுகின்றது. வில்வித்தையில் சிறந்தவன் அல்லவா உடனே குருவானவர் கர்ணனைப் பார்த்து பறக்கும் பறவைக்கு அம்பு எய்யும் படி கூறினார். சிறிது நேரம் தயங்கிய கர்ணன் முடியாது என்றான். ஏன் என வினவியபோது பறவைகள் அதிகாலை பொழுது இரைதேட செல்கின்றது அதனை எதிர்பார்த்து குஞ்சுகள் காத்திருக்கும் எனவே எனது திறமை இதில் நிரூபிக்க வேண்டியதில்லை  என்றான். அதேபோல கற்ற கல்வி மனித சமூகத்தை வளர்க்க உதவ வேண்டுமேயொழிய அதனை சிதைப்பதற்கு துனைபோக கூடாது. இன்றைய கல்வி முறையும் அர்ஜுனனின் வில்வித்தை போன்றதே தன்னை நிரூபித்தால் போதும். சமூகம் எவ்வாறு சென்றாலும் பரவாயில்லை ஆகவே கர்ணன் போன்ற சமூக சிந்தனையை மாணவர்களுக்கு உருவாக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்