Sun. May 19th, 2024

மன்னாரில் பண்டிகைக் கால வியாபாரநிலையங்கள் கேள்விப்பத்திர அடிப்படையில் ஒதுக்கீடு.-

மன்னாரில் நத்தார், புது வருட பண்டிகைக்கால வியாபாராங்களை மேற் கொள்ள இம் முறை மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் கேள்விப்பத்திர அடிப்படையில் தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க மன்னார் நகர சபையினால் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம் முறை மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் 301 தற்காலிக வியாபார நிலையங்கள்  அமைக்க இடம் அடையாளப் படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வர்த்தகர்களிடம் மன்னார் நகர சபையினால் வியாபார நிலையங்களை பெற்றுக்கொள்ள கேள்விப்பத்திர அடிப்படையில் விண்ணப்பம் கோரப்பட்டது.
அதற்கமைவாக வியாபார நிலையங்களை பெற்றுக்கொள்ள பல நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் விண்ணப்பித்திருந்தனர்.டிசம்பர் மாதம் 15 ஆம் திகதியில் இருந்து கேள்வி படிவங்கள் வழங்கப்பட்டது.
இதற்கமையாக இன்று (18) புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில், மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் ,நகர சபையின் உறுப்பினர்கள்,பணியாளர்கள் முன்னிலையில் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஒரு வியாபார நிலையத்தை பெற்றுக்கொள்ள ஆகக்கூடிய கேள்வித் தொகைக்கு விண்ணப்பித்த வர்த்தகருக்கு குறித்த வியாபார நிலையம் அமைக்க இடம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது விண்ணப்பித்திருத்த பல நூற்றுக்கணக்கான வர்த்தகர்களும் வருகை தந்திருந்தனர்.மன்னார் நகர சபையினால் ஆரம்பத்தொகையாக 15 ஆயிரம் ரூபாய் கோரப்பட்ட போதும் ஆகக்கூடிய தொகையாக சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை விண்ணப்பித்துள்ளனர்.பண்டிகைக் காலத்திற்கான தற்காலிக இடங்களை பெற்றுக்கொள்ளும் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை அமைத்து எதிர் வரும் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
வியாபார நிலையங்களை பெற்றுக்கொள்ளுவோர் பிரிதொரு நபருக்கு வியாபார நிலைய இடங்களை கைமாற்றும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதோடு,குறித்த இடம் நகர சபையினால் மீள பெற்றுக்கொள்ளப்படும் என மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்