Sat. May 18th, 2024

தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் கடமையாற்றும் இரு ஆசிரியர்களின் இடமாற்றங்களை இரத்துச் செய்யுமாறு பெற்றோர்களால் வேண்டுகோள்

தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் கடமையாற்றும் இரு ஆசிரியர்களின் இடமாற்றங்களை இரத்துச் செய்யுமாறு பெற்றோர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டு குறித்த கல்லூரி அதிபரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
குறித்த மகஜரில் எமது கல்லூரியில் 55 வயதைக் கடந்து கடமையாற்றும் ஆசிரியர் வே.சந்திரசேகர், இ.பிரதாபசர்மா அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது யாவரும் அறிந்ததே. 55 வயதைக் கடந்த ஆசிரியர்களுக்கு சட்டப்படி இடமாற்றம் வழங்கப்படுவதில்லை. வே.சந்திரசேகர், இ.பிரதாபசர்மா அவர்கள் 55வயதைக் கடந்தவர்கள் என்பதனால் எமது பாடசாலையில் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
வே.சந்திரசேகர் சிறந்த உயர்தர கணிதபாட ஆசிரியராகவும், இ.பிரதாபசர்மா சிறந்த அளவையியலும் விஞ்ஞானமும் பாட ஆசிரியராகவும் கற்பித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மாணவர்களின் ஒழுக்க நடவடிக்கையில் அக்கறையுடைய ஆசிரியர்களாகவும் திகழ்கின்றனர். மேலும் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பக்கபலமாக இருந்து செயற்படும் இவர்கள் கட்டாயம் எமது பாடசாலையில் சேவையாற்ற வேண்டியவர்கள்.
ஆனாலும் அவர்களது இடமாற்றம் தொடர்பான பிரச்சினை தீரவில்லை. இவ்விடயம் தொடர்பாக பாடசாலைச் சமூகம் பல நடவடிக்கைகளைச் செய்தது. கெளரவ வடமாகாண ஆளுநரின் சிபார்சுக்கு அமைவாக இந்த இடமாற்றம் பிற்போடப்பட்டிருந்தமையை அறிந்தோம். மீண்டும் இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என்ற பிரச்சினை தோன்றியுள்ளது. இந்நிலையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வடமாகாணத்திலுள்ள ஒரேயொரு அமைச்சரான கௌரவ கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா அவர்களை நாடியிருந்தது. இன்னும் உறுதியான முடிவு கிடைக்கவில்லை. இப்பிரச்சினையை கௌரவ அமைச்சர் அவர்களே தீர்த்துவைப்பார்.
எனவே. அதிபர் ஆகிய நீங்கள் இந்த இடமாற்றத்தை மீண்டும் இரத்துச் செய்து நல்லதொரு தீர்வைப் பெற்றக்கொள்வதற்காக கௌரவ ஆளுநர், கௌரவ அமைச்சர் ஆகியோரை மீண்டும் நாடி விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பெற்றோர்களாகிய நாம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்