Thu. May 16th, 2024

கரவெட்டி பிரதேச சபை தவிசாளரின் அசமந்தப் போக்கால் சண்டில்குளம் வீடுகளுக்குள் வெள்ளம் 

கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் அவர்களின் அசமந்தப் போக்கால் சண்டில்குளம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் தேங்கிக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் இருந்து சண்டில்குளம் வரை செல்லும் வீதிக்கு 3 அடி உயரமான கொங்கிறீற் வீதி அமைக்கப்பட்டதால் மதவின் ஊடாக வெள்ளம் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கடந்த வருடம் தமது விசனத்தை பத்திரிகைகள்  வாயிலாக தெரிவித்த போது தற்போது அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அடுத்த வருடம் தான் புனரமைப்பு செய்வதாக பத்திரிகை வாயிலாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். அதன் பின்னர் அப்பகுதி நூற்றுக்கணக்கான மக்கள் கையொப்பம் இட்டு கடிதங்கள் கொடுக்கப்பட்ட போதும் செவிசாய்க்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது டெங்கு பெருகிவரும் நிலையில் சிறிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் இருந்தாலே வழக்கு தொடுக்கும் சுகாதார பரிசோதகர்கள் இரு வாரத்துக்கு மேலாகியும் தண்ணீர் தேங்குவதையிட்டு தவிசாளர் மேல் வழக்கு போடாமைக்கான காரணம் என்ன எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னைய காலங்களில் மழை பெய்தால் ஒரிரு நாட்களில் தாமகவே தண்ணீர் ஓடி வல்லை ஆற்றுடன் கலக்கும். ஆனால் தங்களின் வேண்டுகோள் இல்லாமல் வீதியைப் புனரமைப்பதாக கூறி கொங்கிறீற் வீதி போடப்பட்டு வீடுகளுக்குள் வெள்ள நீர் தேங்கிக் கிடக்கிறது.
குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருக்கும் அதிகாரிகளுக்கு மக்களின் நிலை பற்றி தெரியவராது எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தவிசாளர் கவனமெடுக்காதவிடத்து அப்பகுதி மக்கள் அனைவரும் போராட்டம் நடாத்தி அவரின் வீட்டிற்குள் எமது உடமைகளை கொண்டு செல்ல வேண்டி ஏற்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு செல்லும் பல மாணவர்கள் கைகளில் பாதணிகளை ஏந்தியவாறு பரீட்சைக்குச் செல்கிறார்கள். இதைவிட சண்டில்குளமும் மற்றும் வீதியில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரும் கலக்கும் நிலையும் ஏற்படவுள்ளதால் குளத்தில் தவறி விழக்கூடியநிலையும் உருவாகிறது.
தற்போது இந்த வீதியால் வாகனங்கள் செல்ல முடியாமல் பல கிலோமீட்டர் தூரம் சுற்றியே பிரதான வீதிக்கு செல்லவுள்ள நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பாக உரியவர்கள் கவனம் எடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்