Sun. May 19th, 2024

ஒருவரை பலியெடுத்த நேற்றைய வாள்வெட்டு சம்பவம், நடந்தது என்ன

தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பகம் எழுதுமட்டுவாளை அண்டிய பிரதேசமான மிருசுவில் மன்னங்குறிச்சி மருதங்குளம் என்ற இடத்தில் நேற்று (3) இரவு உறவுகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல் வாள் வெட்டுவரை சென்று ஒருவரை பலியெடுத்துள்ளது.

அத்துடன் குறித்த சம்பவத்தில் இருவர் படுகாயத்திற்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது

சிவகுமார் என்பவர் தனது மனைவியின் சகோதரரான மச்சானோடு அடிக்கடி தர்க்கப்பட்டு வருவதாகவும் அது நேற்று கடும் மோதலாக உருவெடுத்ததாகவும் தெரியவருகிறது.

நேற்று வாள்வெட்டுக்கு இலக்காகி மரணமடைந்த சிவகுமார் என்பவர் நேற்று மாலை மது அருந்திவிட்டு போதை தலைக்கேறியதும் வீதியால் சென்ற தனது மச்சானை மறித்து (மனைவியின் சகோதரன்) தர்க்கப்பட்டு அடித்துள்ளார் இதன் பின்னரும் சிவகுமார் வாளுடன் மச்சான் வீட்டிற்கு சென்று சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் மச்சானின் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து வாளை பறித்து தாக்கியதால் சிவகுமார் என்பவர் துரதிஸ்டவசமாக பலியாகியுள்ளார்.

தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது சிவகுமாரின் மனைவி தனது கணவரை மறிப்பதா அல்லது தனது சகோதரர்களை மறிப்பதா என்பதறியாமல் இரு தரப்பையும் தடுப்பதற்காக நடுவில் புகுந்ததால் அவருக்கும் வாள்வெட்டுப்பட்டு காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இச்சம்பவத்தில் தர்மகுலசிங்கம் கிருபாகரன் (வயது 40), தர்மகுலசிங்கம் விஜயகுமார் (வயது 30) தர்மகுலசிங்கம் சிந்துஜன் (வயது 27) சிவகுமார் சுஜிதா (வயது 27) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.

இதில் தர்மகுலசிங்கம் கிருபாகரன் (வயது 40) தர்மகுலசிங்கம் விஜயகுமார் (வயது 30) ஆகியோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தர்மகுலசிங்கம் சிந்துஜன் (வயது 27) இறந்தவரின் மனைவியான சிவகுமார் சுஜிதா (வயது 27)

ஆகியோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள் வெட்டில் மரணமடைந்த 40 வயதுடைய இராசக்கோன் சிவகுமார் என்பவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய, காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவரும் இறந்தவரின் மச்சான்மாரான  சந்தேகநபர்கள் மூவர் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெறுவதாகவும் சிகிச்சை முடிவுற்றதும் மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கொடிகாமம் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்