Sun. May 19th, 2024

ஊரடங்கு நீடிப்பு- கண்காணிப்பில் ஜனாதிபதி

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் கடும் கண்காணிப்பில்  கொவிட் ஒழிப்பு சிறப்பு செயலணி செயலாற்றுவதற்கு ஜனாதிபதி இன்று (5) பல முக்கியமான விடயங்களில் கவனம் எடுக்குமாறு பணித்துள்ளார். ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் கொவிட் ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்படும் சுய தனிமைப்படுத்தல் நடைமுறைகளை கடுமையாக கண்காணிக்குமாறு அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்ட அனைத்து குடும்பங்களும் தத்தமது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும். அவ்வாறு தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் சுமார் 31,457 வீடுகளில் 84,000 பேராகும். மேல் மாகாணத்தில் 13,911 குடும்பங்களில் 40,676 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னரும் முறையாக்க் கண்காணிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி உள்ளேன். ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் சந்திக்கும் கொவிட் ஒழிப்பு சிறப்பு செயலணி இன்று முற்பகல் ஒன்றுகூடிய போதே இந்த பணிப்புரையை அவர் விடுத்துள்ளார். நோய்த் தொற்றாளர்கள் சமூகத்தில் கண்டறியப்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் வசிக்கும் பிரதேசம் பற்றி விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். தேவை ஏற்படின் அந்த பிரதேசங்களைத் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
தோட்டங்கள் மற்றும் அடுக்குமாடி வீடுகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக இன்று கலந்துரையாடப்பட்டது. பொருளாதார மத்திய நிலையங்களை மொத்த விற்பனைக்கு மட்டும் மட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றியும் PCR பரிசோதனைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டும் மிகுந்த கவனத்துடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்படப்பட்டுள்ளது. மரக்கறி, பழங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக்கொண்டு மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்தில் ஈடுபடும் லொறிகளுக்கு ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரங்கள் அவசியமில்லை. கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தின் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தனியார் வைத்தியசாலைகளின் பங்களிப்புடன் சுகாதார அமைச்சினதும் கடற்படையினதும் கண்காணிப்பின் கீழ் வர்த்தக வலயத்தை அண்டிய பிரதேசங்களில் PCR பரிசோதனைகளை எழுமாறாகவும் தொடர்ச்சியாகவும் செய்வதற்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்