Tue. Jun 18th, 2024

ஊடகவியலாளர் த.பிரதீபன் வீட்டின் மீதான தாக்குதல் – யாழ் வடமராட்சி ஊடக இல்லம் கண்டனம்

ஆயுத முனைகளால் பேச முடியாததை வாள் முனையிலும் பெற்றோல் குண்டுகளாலும் மௌனிக்கச் செய்ய முயற்சி! – ஊடகவியலாளர் த.பிரதீபன் வீட்டின் மீதான தாக்குதலுக்கு கண்டனம்!

ஊடகவியலாளர் தம்பித்துறை பிரதீபனின் வீட்டின் மீது நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல் மற்றும் உயிரச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயற்பாடானாது, ஆயுத முனைகளால் பேச முடியாததை வாள் முனையிலும் பெற்றோல் குண்டுகளாலும் பேசி மௌனிச்செய்யும் அடக்குமுறையின் வெளிபாடாகும். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

வாள்கள் மற்றும் பெற்றோல் குண்டுகள் மூலம் ஊடகவியலாளர் த.பிரதீபனின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தும் வீட்டில் இருந்த உடமைகளை எரித்து நாசப்படுத்திய தரப்பினர், சம்பவ இடத்தில் மூன்றாம் பாலினத்தவரின் பெயரில் துண்டுப் பிரசுரத்தை வீசிச் சென்றுள்ளதன் மூலம் அவர்கள் மீது பழியை போட்டுவிட்டு கவனத்தை திசைதிருப்பும் நடவடிக்கையாகவே பார்க்கமுடிகிறது.

குறித்த வன்முறை தாக்குதல் சம்பவத்திற்கு பின்னால் பாரிய சதியொன்று புதைந்துள்ளதை நாம் அவதானிக்கின்றோம். கடந்த இரு மாதங்களாக நாட்டின் ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயத்தின் போதான நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளர் த.பிரதீபனுக்கு ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினரால் தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் தமிழ் ஊடகத்துறையின் மீதான நேரடி மற்றும் மறைமுக தாக்குதல் சம்பவங்கள், படுகொலைகள், உயிரச்சுறுத்தல் நடவடிக்கைகள் மற்றும் விசாரணை கெடுபிடிகள் என்பன இன்றும் அதேவடிவத்தில் தொடர்ந்து வருகின்ற நிலையில் இவ்வாறான வன்முறைக் கும்பல்களின் மூலம் ஊடகவியலாளர்களை மௌனிக்கச் செய்யும் எத்தனிப்பானது மிக மிக ஆபத்தான அனுகுமுறையாகும்.

தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு இருப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டு வரும் இன்றைய சூழமைவில் தமிழர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும், நெருக்கடிகளையும் வெளிக்கொணரும் ஒரே வழிமுறையாக ஊடக பரப்பு இருந்து வருகிறது. இவ்வாறான நிலையில் நிகழ்ந்துள்ள இத்தாக்குதலானாது ஊடக சுதந்திரத்தின் மீதான பாரிய அச்சுறுத்தலாகும். இச் செயற்பாட்டினை தனியே குறித்த ஒரு ஊடகவியலாளருக்கு எதிரான உரிமை மீறலாக கடந்து சென்றுவிட முடியாது.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், பல்வேறு வடிவங்களில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த அடக்குமுறையானது புதிய புதிய வடிவங்களில் இன்றும் தொடர்ந்தவண்ணமேயுள்ளது. இவ்வாறு உயிர்ப்பலியெடுப்புகள், காணாமல்போகச் செய்தல்கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தவாறே தமிழ் ஊடகத்துறை தமிழ் மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து வருகிறது. அதனையும் நசுக்கி தமிழர்களது குரலை மௌனிக்கச் செய்யும் விதமாக ஊடகத்ததுறை மீதான இவ்வாறான தலையீடுகளை நாம் வன்மையாக கண்டிப்பதோடு, இதுபோன்ற அடக்குமுறை செயற்பாடுகள் உடனடியாகவே தடுத்து நிறுத்தப்பட்டு ஊடக சுதந்திரத்தை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்துகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்