Mon. May 20th, 2024

அரசாங்க அதிபரிடம் மாநகர முதல்வர் ஆனல்ட் அவசர கோரிக்கை 

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் நிலை தொடர்பில் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் அவசர கோரிக்கை ஒன்றை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முன்வைத்துள்ளார். இன்று முதல்வரால் அனுப்பிவைக்கப்ட்டுள்ள கடிதத்திலேயே மேற்படிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாட்டு மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக ஊரடங்கு சட்டம் நீண்ட நாட்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. ஊரடங்கின் போதும் சரி, ஊரடங்கு தளர்வின் போதும் சரி நடைமுறை வாழ்வியலில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் பல்வேறு தாக்கங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

 

பின்வரும் தொழில்நிலை சார்ந்தோர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது,

 

1. யாழ் மாவட்ட சிகை ஒப்பனையாளர்கள் வைரஸ் தாக்கம் அடையாளம் காணப்பட்ட நாட்களிலிருந்து எமது கோரிக்கைக்கு அமைவாக தமது அழககங்களை மூடியதுடன், தற்பொழுதும் நாடுதழுவிய ரீதியிலான அறிவுறுத்தலுக்கமைவாகவும் தொடர்ச்சியாக தமது ஒப்பனை நிலையங்களை மூடி இவ் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.   இதனால் 750 இற்கும் மேற்பட்ட நாளாந்த தினக்கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களின் வாழ்வாதாமும் மிகவும் பாதிப்படைந்திருக்கின்றது.

2. கடல் தொழிலுக்கான அனுமதிகள் ஊரடங்கு காலப்பகுதியில் வழங்கப்பட்டிருந்தாலும், ஆழ் கடல் மீன்பிடிகளுக்கான அனுமதிகள் வழங்கப்படாமையினால் அத் தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 1000 இற்கும் மேற்பட்ட தினக் கூலித் தொழில் மேற்கொள்ளும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

3. கடல் தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்ட போதிலும் ஒரு படகில் இருவர் மாத்திரமே தொழிலில் ஈடுபட முடியும் என்று மட்டுப்படுத்தப்பட்டமையினால் கடற் றொழிலாளர்கள் அதிர்ச்சியில் உள்ளதுடன், மீன்பிடியிலும் ஈடுபட முடியாதுள்ளனர். எனவே ஒரு படகிற்கான தொழிலாளர்களின் எண்ணிக்கையை மூன்றாகவோ அல்லது நான்காகவோ அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

4. எவ்வித தொழில் நடவடிக்கைகளும் இன்றி தற்பொழுது சிரமங்களை எதிர்நோக்கிவரும் குடிசைக் கைத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் முச்சக்கர வண்டி நடத்துனர்கள், வாழ்வாதார நிலைமைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

5. இடர்காலத்தில் சகலரும் நன்மையடையக் கூடிய வகையில் அத்தியவசிய பொருட்கள் அனைவருக்கும் நியாய விலையில் கிடைப்பதை உறுதி செய்தல்.

எனவே மேற்படி நிலைமைகளை கருத்திற் கொண்டு மேற்குறித்த தொழில்சார் குடும்பங்களுக்கு ஊரடங்கு உத்தரவுகள் நீடிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்களை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட செயலகத்தின் ஊடாக விசேட பொறிமுறை ஒன்றின் ஊடாக வாழ்வாதார திட்டங்களை வழங்குவது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். என்றுள்ளது.

முதல்வரின் ஊடகப்பிரிவு

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்