உடற்கல்வி டிப்ளமோ தாரிகள் நியமனத்தின் பின்னரே வடக்கில் விளையாட்டு பரவலாக்கம் பட்டுள்ளது – இ.ராஜசீலன்
உடற்கல்வி டிப்ளோமா தாரிகள் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேற்றத்தின் பின்னரே வடக்கு பாடசாலைகளில் விளையாட்டு பரவலாக்கப்பட்டது என வடமாகாணத்தின் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் இ.ராஜசீலன் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி டிப்ளோமா கற்கை நெறியின் வெள்ளி விழாவின் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி துரையப்பா விளையாட்டு மைதானத்தில் தலைவர் ப.தர்மகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக வடமாகாண உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் இ.ராஜசீலன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது உரையில், முன்னர் பாடசாலைகளில் மூன்று பெருவிளையாட்டுக்களே இருந்தன. உடற்கல்வி டிப்ளோமாதாரிகளின் நியமனத்தின் பின் முப்பத்தைந்து பெருவிளையாட்டு உருவாக்கப்பட்டு விளையாடப்படுவதுடன் தேசிய வெற்றிகளையும் பெற்று வருகின்றனர். அதுமட்டுமன்றி தேசிய போட்டிக்கு நிகராக போட்டிகளை ஒழுங்கமைத்து நடாத்துவதற்கும், நடுவர் பணியாற்றுவதற்கும் உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி பெரும் பங்காற்றியுள்ளது. அத்துடன் 350பயிற்றுனர் நியமனத்திற்கும் டிப்ளோமா ஆசிரியர்கள் பங்காற்றியுள்ளனர். விளையாட்டை வளர்ப்பதுடன் மட்டும் நின்றுவிடாது பல்வேறுபட்ட சமூக பணிகளையும் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கம் செய்து வருகின்றது. எனவே விளையாட்டுத்துறையின் வளர்ச்சியானது மேல்நோக்கி செல்ல வேண்டுமாக இருந்தால் இன்னும் ஒற்றுமையாக எல்லோரும் செயலாற்ற வேண்டும். பாடசாலைகளில் இருந்து போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் எனத்தெரிவித்தார்.