Fri. May 17th, 2024

வலைப்பந்தாட்டத்தில் சாதித்தது அச்சுவேலி சென். தெரேசாள் மகளிர் கல்லூரி 

யாழ் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களிற்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி சம்பியன் மற்றும் வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
யாழ் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களிற்கான வலைப்பந்தாட்டப் போட்டிகள் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
16 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான ஆட்டத்தில் குழுப் போட்டியில் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி அணி அத்தியார் இந்துக் கல்லூரி அணியை 14:2 என்ற புள்ளிகள் வித்தியாசத்திலும், கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி அணியை 16:7 என்ற புள்ளிகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று காலிறுதியாட்டத்தில் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணியை எதிர் கொண்டு 20:6 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதியில் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து யாழ் திருக்குடும்ப கன்னியர்மடம் மகா வித்தியாலய அணி மோதியது.  இதில் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி 10:8 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது.
இறுதியாட்டத்தில் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியும் வேம்படி மகளிர் கல்லூரியும் பலப்பரீட்சை நடாத்தினர். இரு அணிகளும் ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இருப்பினும் ஆட்ட நேர அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி அணி 8:6 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
18 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான மூன்றாம் இடத்திற்கான போட்டியில் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து யாழ் இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது. இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆதிக்கம் செலுத்தி 8:6 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர்.  ஆனால் இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி 16:15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  வெண்கலப் பதக்கத்தை தமதாக்கிக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்