Sun. May 19th, 2024

மே மாதம் பொதுத் தேர்தல் வரலாற்றில் இடம் பிடிக்கும் 

இம்முறை மே மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றால் அது வரலாற்றில் இடம் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது.
எதிர்வரும் மே மாதம் 27ம் திகதி பொதுத் தேர்தல் நடக்குமாயின் 50 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மே மாதத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலாக அமையும் எனக் கூறப்படுகிறது.
கொரோனா’ வைரஸ் தாக்கத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தல் மே இறுதி வாரத்தில் நடைபெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், தேர்தலை நடத்தும் கால எல்லை குறித்து ஏப்ரல் 20 ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்காக தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. வைத்திய நிபுணர்கள், பாதுகாப்பு படைகளின் பிரதானி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட துறைசார் நிபுணர்களும் பங்கேற்கவுள்ளனர்.
ஜுன் 2 ஆம் திகதிக்கு முன்னர் 9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வை நடத்தும் வகையில் பொதுத்தேர்தல் நடைபெறாவிட்டால், அது அரசியலமைப்பு நெருக்கடிக்கு வழிவகுக்கக்கூடும்.
நாட்டில் 10 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை. எனவே, கட்டங்கட்டமாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவதற்கு சில தரப்புகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
எது எப்படியிருந்தபோதிலும் மே மாதம் இறுதிப்பகுதியில் தேர்தல் நடத்தப்படுமானால் 50 ஆண்டுகளுக்கு பின்னர் மே மாதத்தில் நடைபெறும் தேர்தலாக இது அமையும்.
1970 ஆம் ஆண்டில் மே மாதம் 27 ஆம் திகதியன்றே பொதுத்தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் (சனப் பிரதிநிதிகள் சபை) 1947 ஆகஸ்ட் 23 முதல் 1947 செப்டம்பர் 20 வரை 19 நாட்கள் நடைபெற்றது.
இலங்கையில் இரண்டாவது பொதுத்தேர்தல் 1952 மே 24 ஆம் திகதி முதல் நடைபெற்றது.
மூன்றாவது பொதுத்தேர்தல் 1956 ஏப்ரல் 5, 7 மற்றும் 10 ஆம் திகதிகள் நடத்தப்பட்டது.
நான்காவது பொதுத்தேர்தல் 1960 மார்ச் 19 ஆம் திகதி நடைபெற்றது.
1947, 1952, 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது தேர்தல் திகதியாக மூன்றிற்கும் மேற்பட்ட நாட்கள் அறிவிக்கப்படும்.1960இல் நடைபெற்ற 5ஆவது பொதுத்தேர்தல் 1960 ஜீலை 20 ஆம் திகதி நடத்தப்பட்டது.
6ஆவது பொதுத்தேர்தல் 1965 மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்றது.
7ஆவது பொதுத்தேர்தல் மே மாதம் 27 ஆம் திகதி நடைபெற்றது. ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றது. இறுதியாக மே மாதத்தில் இடம்பெற்ற தேர்தல் இதுவாகும்.
1977 ஜுலை 21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
தொகுதி அடிப்படையிலான தேர்தலுக்கு பதிலாக விகிதாசாரமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1977 இற்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட திகதிகள்
15.02.1989
16.08.1994
10.10.2000
05.12.2001
02.04.2004
08.04.2010 & 20.04.2010
17.08.2015
மாதங்களில் நடைபெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்