Tue. Jun 18th, 2024

பழைய மாணவர் சங்கம் வலுவாக உள்ள பாடசாலைகளே இன்று மிக உச்சத்தில் வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது – ப.தர்மகுமாரன்

பழைய மாணவர் சங்கம் வலுவாக உள்ள பாடசாலைகளே இன்று மிக உச்சத்தில் வளர்ச்சி அடைந்து காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.

வட்டு இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களால் நடாத்தப்பட்ட துடுப்பாட்ட போட்டியின் இறுதி நிகழ்வு அண்மையில் பாடசாலையின் அதிபரும் பழைய மாணவ சங்க தலைவருமாகிய லங்காபிரதீபன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதீதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சங்கத்தின் தலைவர் மேலும் தனதுரையில், “விதைத்துக் கொண்டே இரு முளைத்தால் மரம் இல்லையேல் நிலத்துக்கு உரம்” என்பது போல நாமும் சிந்தனையை விதைத்துக் கொண்டே இருக்கிறோம். அது சிறந்த இடத்தில் விழும்போது விருட்சமாகின்றது. அப்பொழுது சமூகத்தில் மாற்றத்தையும் புரட்சியையும் ஏற்படுத்துகின்றது. பாடசாலைகளே நல்ல சமூகத்தையும் நற்பிரஜைகளையும் உருவாக்கின்றது.

அதனால் பாடசாலையின் மூலம் தம்மை அடையாளப்படுத்தியவர்கள்  பாடசாலையின் வளர்ச்சியிலும் உயர்ச்சியிலும் பங்குதாரர்கள் ஆக வேண்டும். இப்பொழுது கல்விகற்கின்ற மாணவர்களின் நன்மை கருதி செயல்பட்டு அவர்களின் கல்வி விளையாட்டு ஏனைய ஆற்றல்களை வெளிக்கொணர உதவ வேண்டும். பாடசாலை நிர்வாகத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து முன்னேற்ற சிந்தனையை தட்டிக்கொடுப்பதுடன் பாடசாலையின் கீர்த்தி பாதிக்கப்படாத வகையில் செயலாற்ற வேண்டும். முரண்பாட்டுடன் பயணிக்காது அக புற முரண்களை தவிர்த்து ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு நிகழ்கால எதிர்கால மாணவர்களின் ஆற்றல்களை பிரகாசமாக்க பழைய மாணவர்கள் சங்கமாக கட்டியெழுப்பப்பட வேண்டும். பாடசாலையே சிறந்த சமூகத்தை உருவாக்குகின்றது. எனவே சமூகம் பாடசாலையை சிறப்பாக பேணவேண்டும் . அதற்கு பழைய மாணவசங்கம் முக்கியமானது. இன்று சாதனைகள் நிகழ்த்துகின்ற அனைத்து பாடசாலையின் பழைய மாணவசங்கங்கள் வலுவாகவும் ஒற்றுமையாகவும் செயல்பட்டு பின்னால் நின்று பாடசாலைகளை முன்னகர்த்துகின்றன. மாணவர்களின் போசாக்கு, விளையாட்டு உபகரணம், கற்றல் உபகரணம் வழங்குவதில் பழைய மாணவர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்