Sun. May 19th, 2024

நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி- பிரதமர் மோடி உரையாடல் தொடர்பான தகவல்கள்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையிலான தொலைபேசி வாயிலாக உரையாடல் நேற்று இடம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான ஜனாதிபதி தெரிவிக்கையில்
கொவிட் நெருக்கடியிலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த பிரதமர் மோதி அவர்களும் நானும்  இணக்கியுள்ளோம்:
இன்று முற்பகல், சுமுகமான தொலைபேசி உரையாடலொன்றில் ஈடுபட்ட நானும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து வகையான உறவுகளையும் கொவிட் பிரச்சினைக்கு மத்தியிலும் மேலும் மேம்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தோம்.
ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இந்திய பிரதமருடன் உரையாடிய நான் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி கருத்துக்களை பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி தெரிவித்ததுடன் –
தற்போதைய கஷ்டமான காலகட்டத்தில் இலங்கைக்கு செய்த உதவிகள் தொடர்பில் பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்தேன்.
இந்தியா அன்பளிப்பு செய்த 10 தொன் மருத்துவ உதவிகள் பெரிதும் பயனளித்ததாகவும் நான் குறிப்பிட்டேன்..
‘இந்தியா கொவிட் 19 நோய்த்தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளது என நான் நம்புகின்றேன். அதற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு குறிப்பாக குறைந்த வசதிகளைக் கொண்டவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார நிவாரணங்களை நான் பாராட்டுகிறேன். இலங்கையில் நாமும் நோய்த்தொற்றை திருப்திகரமாக கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்திருக்கின்றோம்.’ என்றும் நான் தெரிவித்தேன்.
இதற்கு பதிலளித்த இந்திய பிரதமர், 130 கோடி மக்களை கையாள்வது கடினமானது என்ற போதும் நோய்த்தொற்று பரவலை சுமார் 75 வீதம் கட்டுப்படுத்த முடிந்திருப்பதாக தெரிவித்தார்.
‘தெளிவான சிந்தனையுடன் விரைவாக கடினமான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு தலைவராகவே’ என்னை தான் புரிந்து வைத்திருப்பதாக பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிட்டு எனக்கு மதிப்பளித்தார்.
“என்னிடமுள்ள தகவல்களின் படி இலங்கை நோய்த்தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளது. அதன் கௌரவம் உங்களையே சாரும்’ என்றும் இந்திய பிரதமர் மேலும் தெரிவித்தார்.
தற்போது எனது முன்னுரிமை பொருளாதாரப் புத்தெழுச்சி ஆகும் என நான் குறிப்பிட்டதுடன், சில முன்னணி திட்டங்களுக்கு மீண்டும் உயிரூட்டுவதற்கு இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தேன்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விரைவாக நிர்மாணிப்பது அவற்றில் ஒன்றாகும். பெறுமதி சேர்க்கப்பட்ட கைத்தொழில் மற்றும் விவசாய உற்பத்திகளை மேம்படுத்துவது மற்றுமொரு நோக்கமாகும்.
இத்துறைகளில் முதலீடு செய்யுமாறு இந்திய வர்த்தகர்களையும் தற்போது இலங்கையிலிருக்கும் இந்திய வணிக நிறுவனங்களையும் ஊக்குவிக்க முடியுமானால் அது கொரோனாவுக்குப் பிந்திய காலப்பகுதியில் பொருளாதாரப் புத்தெழுச்சிக்கு உதவியாக அமையும் என்றும் நான் அவரிடம் குறிப்பிட்டேன்
இரு நாடுகளுக்கும் இடையில் நடைமுறையில் உள்ள நிதி வசதிகளைப் பரிமாறிக்கொள்ளும் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு நான் முன்மொழிந்தேன்.
சார்க் பரிமாற்ற வசதியின் கீழ் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள 400 மில்லியன் டொலர்களுக்கு 1.1 பில்லியன் டொலர்களை சேர்ப்பதற்கு இந்திய அரசாங்கம் இணங்கினால் அது அந்நிய செலாவணி பிரச்சினையை முகாமைத்துவம் செய்வதற்கு பெரும் உதவியாக அமையும் என்றும் நான் குறிப்பிட்டேன்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் மோதி அவர்கள் –
‘இலங்கைக்கு உதவுவதற்கு நான் தனிப்பட்ட முறையில் அர்ப்பணிப்புடன் உள்ளேன். இலங்கைக்கு சாதகமான சூழ்நிலைகளின் கீழ் உதவுவதற்கு நாம் தயாராக உள்ளோம். இதற்காக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகருடன் இணைந்து பணியாற்றுவதற்கு பொருத்தமான ஒரு பிரதிநிதியை நியமியுங்கள்’ என்று தெரிவித்தார்.
தற்போது கட்டியெழுப்பப்பட்டுள்ள இருதரப்பு கூட்டுப்பங்காண்மையை – மக்களுக்கு நேரடி நன்மைகளைக் கொண்டுவரும் மற்றும் உணவு, சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்த திட்டங்களாக முன்னெடுப்பதற்கும் இரு தலைவர்களும் இணங்கினோம்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்