Sun. May 19th, 2024

நாடெங்கும் 12 ஆயிரம் குடும்பங்களை உள்ளடக்கிய உணவு உற்பத்தி திட்டம்

ஜனாதிபதியின் விசேட செயலணியின் வேலைத் திட்டத்தின் கீழ் தேசிய மனைப் பொருளாதார உற்பத்திகளை நாடளாவிய ரீதியில் விருத்தி செய்யும் நோக்கில் பயிர்க் கன்றுகள் வழங்கும் நிகழ்வு மொனராகலையை மையமாக கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் விவசாயத் துறையை விருத்தி செய்வதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்குவதுடன். மனைப் பொருளாதார உற்பத்தியை விருத்தி செய்வதன் மூலம் மக்கள் தமக்குத் தேவையான உணவு உற்பத்தியை மாத்திரமின்றி மேலதிக உணவு உற்பத்திகளையும் மேற்கொள்ள முடியும். பொருளாதார துறையை விருத்தி செய்வதன் ஊடாக வறுமையை முடிவுக்குக் கொண்டு வர முடியும். இந்த நோக்கத்துடனேயே தேசிய மனைப் பொருளாதாரத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்குத் தேவையான பயிர்க் கன்றுகள், உர வகைகள் உள்ளிட்ட பொருட்களை அரசு வழங்கவுள்ளது. பல்வேறுபட்ட காலநிலை சுற்றுச் சூழலுக்கேற்ப நாற்றுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக சிறிய ஏற்றுமதிப் பயிர்களை கிளை ஒட்டு செய்து வழங்குதல். முதிரை போன்ற பலன் தரும் மரக் கன்றுகளை வழங்குவது போன்றனவும் இவ்வேலைத் திட்டத்தின் நோக்காகும். நாடளாவிய ரீதியில் 12 ஆயிரம் கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்தும் 24 ஆயிரம் குடும்பங்களை இவ்வேலைத் திட்டத்தினுள் உள்ளீர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. உணவு உற்பத்திக்குத் தேவையான மனைப் பொருளாதார உற்பத்தியை மேற்கொள்வதற்கும் மேலாக மனைப் பொருளாதார செய்கையாளர்களை வலுவூட்டுவதே இவ்வேலைத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

மொனராகலையை மையமாகக் கொண்டு ஆரம்பமான இந்நிகழ்வின் போது இராஜாங்க அமைச்சர்களான செஹான் சேமசிங்க ,ஷசிந்ர ராஜபக்ஷ, பேரகொட உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்